மியான்மர் அதிபர் யு மின் ஆங் டெல்லி வருகை.... நாளை பிரதமர் மோடியுடன் சந்திப்பு!
அண்டை நாடான மியான்மரில் அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலைத் தொடர்ந்து, அந்நாட்டின் புதிய அதிபராகப் பொறுப்பேற்றுள்ள யு மின் ஆங் ஹிலெய்ங், இருநாடுகளின் வரலாற்றுச் சிறப்புமிக்க கலாச்சார, வர்த்தக மற்றும் பாதுகாப்பு உறவுகளை மேம்படுத்தும் நோக்கில் 5 நாள் அரசு முறைப் பயணமாக நேற்று இந்தியா வந்தடைந்தார். அதிபராகப் பொறுப்பேற்ற பிறகு அவர் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டுப் பயணம் இதுவாகும்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அதிகாரப்பூர்வ அழைப்பின் பேரில், மியான்மர் அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் மற்றும் தொழிலதிபர்கள் அடங்கிய உயர்மட்டக் குழுவுடன் அதிபர் யு மின் ஆங் ஹிலெய்ங் தனி விமானம் மூலம் இந்தியா வந்தார்.
தனது இந்தியப் பயணத்தை ஆன்மிகத் தன்மையுடன் தொடங்கிய அவர், நேற்று காலை பீகார் மாநிலம் கயாவிலுள்ள புகழ்பெற்ற சர்வதேசப் புண்ணியத் தலமான மகாபோதி ஆலயத்திற்குச் சென்று சிறப்புத் தரிசனம் செய்தார். அங்கு அவரை பீகார் மாநில ஆளுநர் லெப்டினன்ட் ஜெனரல் சையத் அதா ஹஸ்னைன் (ஓய்வு) நேரில் வரவேற்றார்.
கயா மற்றும் சுஜாதா ஆலய வழிபாடுகளை முடித்துக் கொண்டு, நேற்று மாலை டெல்லியில் உள்ள பாலம் விமானப் படை தளத்திற்கு வந்தடைந்த அவரை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக அதிகாரிகள் முறைப்படி வரவேற்றனர். அதனைத் தொடர்ந்து, நேற்று இரவே இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கரை அவர் சந்தித்துப் பேசினார்.
டெல்லியில் இன்று நடைபெறும் இந்தியா - மியான்மர் வர்த்தகக் கூட்டமைப்பில் பங்கேற்கும் அதிபர், நாளை அதிகாரப்பூர்வப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளார். நாளை காலை டெல்லி ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடியை, மியான்மர் அதிபர் நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
இந்த உயர் மட்டச் சந்திப்பின் போது, இரு நாடுகளுக்கும் இடையேயான 1,640 கிலோமீட்டர் நீளமுள்ள எல்லைப் பாதுகாப்பு மேலாண்மை, அண்டை நாடுகளுடனான சாலை மற்றும் கடல்வழி உள்கட்டமைப்புத் திட்டங்களை வேகப்படுத்துதல், எல்லைத் தாண்டிய போதைப்பொருள் கடத்தல் தடுப்பு மற்றும் பாதுகாப்புத் துறை ஒத்துழைப்பு குறித்து இரு தலைவர்களும் தீவிரமாக ஆலோசித்து முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட உள்ளனர்.
பிரதமருடனான சந்திப்பைத் தொடர்ந்து, நாளை மாலை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவையும் அவர் ராஷ்டிரபதி பவனில் மரியாதை நிமித்தமாகச் சந்திக்கத் திட்டமிட்டுள்ளார். டெல்லி அதிகாரப்பூர்வ நிகழ்வுகளை முடித்துக் கொண்டு, ஜூன் 2-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மியான்மர் அதிபர் மும்பை நகருக்குச் செல்லவுள்ளார். அங்கு மகாராஷ்டிர மாநில ஆளுநரைச் சந்திப்பதுடன், இந்தியாவின் முன்னணி தொழில்துறை கூட்டமைப்பின் தலைவர்கள் மற்றும் சிஐஐ பிரதிநிதிகளைச் சந்தித்து மியான்மரில் இந்திய முதலீடுகளை ஈர்ப்பது குறித்துக் கலந்துரையாட உள்ளார்.
மியான்மரின் தற்போதைய புதிய அரசியல் சூழலில், அதன் அதிபர் முதன்முறையாக இந்தியாவைத் தேர்ந்தெடுத்துப் பயணம் மேற்கொண்டுள்ளது, தெற்காசியப் பிராந்தியத்தின் புவிசார் அரசியல் மற்றும் இருதரப்புப் பொருளாதார வளர்ச்சியில் மிக முக்கிய நகர்வாகப் பார்க்கப்படுகிறது.