அமெரிக்க சொகுசு கப்பலில் மர்ம வைரஸ் பாதிப்பு... 115 பேருக்கு வாந்தி, பேதியால் அவதி!

 

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள போர்ட் எவர்கிளேட்ஸ் பகுதியில் இருந்து கடந்த ஏப்ரல் மாத இறுதியில் சொகுசு கப்பல் ஒன்று புறப்பட்டுச் சென்றது. இந்த பயணத்தின் போது கப்பலில் இருந்தவர்களுக்கு திடீரென நோரா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கப்பலில் பயணம் செய்த 3,116 பேரில் 102 பயணிகள் மற்றும் 13 ஊழியர்கள் என மொத்தம் 115 பேருக்கு இந்தத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட நபர்களுக்கு வாந்தி மற்றும் பேதி உள்ளிட்ட கடுமையான அறிகுறிகள் காணப்படுகின்றன. இந்த வைரஸானது அதிக தொற்றும் தன்மை கொண்டது என்று அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தொற்று பாதித்த நபரிடம் இருந்து மற்றொருவருக்கு இது மிக விரைவாகப் பரவும் என்பதால் கப்பலில் உள்ள மற்றவர்களும் அச்சத்தில் உள்ளனர்.

கலப்பட உணவு, தண்ணீர் அல்லது அசுத்தமான மேற்பரப்புகள் மூலமாக இந்தத் தொற்று பரவுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகளவில் உள்ளன. பாதிக்கப்பட்ட சிலருக்கு வயிற்று வலி, தலைவலி மற்றும் காய்ச்சல் போன்ற பொதுவான அறிகுறிகளும் தென்பட்டுள்ளன. இந்தச் சூழலில், அந்தச் சொகுசு கப்பல் நாளை போர்ட் கேனவரல் பகுதிக்குத் திரும்ப உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.