பாரில்  மின்கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 2 ஊழியர்கள் பரிதாப பலி! 

 

மைசூரு ஆர்.டி.நகரின் தட்டகள்ளி அருகே பாக்ஸ் டென் லிக்கர் கேரேஜ் என்ற ரெஸ்ட்ரோ பார் ஒன்று நீண்ட காலமாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று இந்த பாரில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட திடீர் மின்கசிவு காரணமாகப் பயங்கரமான தீ விபத்து நேர்ந்துள்ளது. கண்ணிமைக்கும் நேரத்தில்  பரவிய இந்த தீ ஒட்டுமொத்த கட்டிடம் முழுவதும் சூழ்ந்து கொண்டதால், அங்கு வேலை செய்து வந்த ஊழியர்கள் மற்றும் மது அருந்த வந்த வாடிக்கையாளர்கள் அனைவரும் வெளியே வர முடியாமல் உள்ளேயே சிக்கித் தவித்தனர்.

திடீரென ஏற்பட்ட இந்த   தீ விபத்தினால் அங்கு கரும் புகை மூட்டம் ஏற்பட்டு ஒட்டுமொத்தப் பகுதியும் போர்க்களமாக மாறியது. இந்த கோர விபத்தில் சிக்கிய டார்ஜிலிங்கை சேர்ந்த ஷாஹீன் (26) மற்றும் நேபாளத்தை சேர்ந்த பிரகாஷ் (24) ஆகிய 2 இளைஞர்கள் பலத்த தீக்காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதற்கிடையே கட்டிடத்திற்குள் ஏற்பட்ட மூச்சுத் திணறல் காரணமாகப் பலர் தங்களின் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள மேல் மாடிக்குச் சென்று அங்கிருந்து கீழே குதித்ததில் பலருக்குக் கை மற்றும் கால்களில் பலத்த எலும்பு முறிவு ஏற்பட்டது.

இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்து  உடனடியாக விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் மீட்புப் படையினர் பல மணி நேரம் போராடி   தீயை முழுமையாகக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். அதன் பின்னர் கட்டிடத்தின் உள்ளே காயங்களுடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த மற்ற நபர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டுச் சிகிச்சைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த நெஞ்சை உலுக்கும் விபத்து குறித்துக் காவல்துறையினர் தற்பொழுது வழக்குப் பதிவு செய்து தீ விபத்திற்கான அசல் காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.