நாம் தமிழர் கட்சிக்கு 234-க்கு 234 - சீமான் உட்பட அனைத்து வேட்பாளர்களின் மனுக்களும் ஏற்பு! 

 

தமிழக அரசியல் வரலாற்றில் தொடர்ந்து தனித்துப் போட்டியிட்டு வரும் நாம் தமிழர் கட்சி, இந்த 2026 சட்டமன்றத் தேர்தலிலும் 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களைக் களம் இறக்கியுள்ளது. இன்று நடைபெற்ற வேட்புமனுக்கள் பரிசீலனையில் அக்கட்சிக்குச் சாதகமான முடிவு கிடைத்துள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் இன்று தேர்தல் அதிகாரிகளால் ஆய்வு செய்யப்பட்டன. இதில் காரைக்குடி தொகுதியில் போட்டியிடும் சீமானின் வேட்புமனு எவ்விதத் தடையுமின்றி ஏற்கப்பட்டது. மாநிலம் முழுவதும் போட்டியிடும் மற்ற 233 வேட்பாளர்களின் மனுக்களும் முறையாக இருந்ததால், தேர்தல் ஆணையம் அவற்றை ஏற்றுக்கொண்டது.

வழக்கம் போல இந்த முறையும் 117 ஆண்கள் மற்றும் 117 பெண்கள் எனச் சமமான அளவில் வேட்பாளர்களை நிறுத்திப் புரட்சி செய்துள்ளது நாம் தமிழர் கட்சி. சில தொகுதிகளில் மற்ற கட்சிகளின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்ட சூழலில், நாம் தமிழர் கட்சியின் அனைத்து மனுக்களும் ஏற்கப்பட்டது அக்கட்சியின் முறையான திட்டமிடலைக் காட்டுவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டதைத் தொடர்ந்து, இனிவரும் நாட்களில் பிரசாரம் மேலும் சூடுபிடிக்க உள்ளது. ஏற்கனவே சீமான் தமிழகம் முழுவதும் புயல் வேகப் பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், 234 தொகுதிகளிலும் வேட்பாளர்கள் தங்களது பிரசார வியூகங்களை வகுக்கத் தொடங்கியுள்ளனர்.