நான் முதல்வன்' திட்டம் பெயர் மாற்றம் - பழைய பதிவுகளும் நீக்கம்!

 

கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் தமிழக மாணவர்களின் வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாட்டிற்காகத் தொடங்கப்பட்ட புகழ்பெற்ற 'நான் முதல்வன்' திட்டத்தின் பெயரை, தற்போதைய தவெக அரசு 'திறன் தமிழ்நாடு' என்று மாற்றம் செய்துள்ளது. பெயர் மாற்றத்தோடு மட்டுமன்றி, இத்திட்டம் தொடர்பாகச் சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டிருந்த முந்தைய ஆட்சி காலப் பதிவுகள் அனைத்தும்  முழுமையாக நீக்கப்பட்டுள்ளன.

இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் கல்வி, தொழில் வழிகாட்டுதல், உலகளாவிய திறன் மற்றும் வேலைவாய்ப்பை மேம்படுத்தும் உன்னத நோக்கில் கடந்த 2022-ஆம் ஆண்டு மார்ச் 1-ஆம் தேதி அப்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலினால் 'நான் முதல்வன்' திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, கடந்த 2023-ஆம் ஆண்டு மார்ச் 7-ஆம் தேதி, இத்திட்டத்தின் கீழ் போட்டித் தேர்வுகளுக்கான தனிப் பிரிவை அப்போதைய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மத்திய அரசு வேலைவாய்ப்புகளான யுபிஎஸ்சி, பணியாளர் தேர்வாணையம், ரயில்வே, வங்கிப் பணிகள் ஆகிய போட்டித் தேர்வுகளில் தமிழக இளைஞர்கள் அதிகளவில் வெற்றி பெற வேண்டும் என்பதே இதன் முதன்மை நோக்கமாகும்.

நுழைவுத் தேர்வு மூலம் ஆண்டுதோறும் தேர்வு செய்யப்படும் 1,000 தகுதியான மாணவர்களுக்குச் சென்னையில் உள்ள அகில இந்திய குடிமைப்பணி தேர்வு பயிற்சி மையத்தில் 6 மாத காலம் கட்டணமில்லா தங்குமிடம் மற்றும் உணவு வசதியுடன் கூடிய பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது.

யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு 10 மாதங்களுக்குத் தலா ரூ. 7,500 ஊக்கத்தொகையும், முதன்மைத் தேர்வு  தேர்ச்சி பெறுவோருக்கு ரூ. 25,000 நிதியுதவியும் வழங்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுத் தவெக அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், இத்திட்டத்தின் வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் கட்டமைப்புகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன் முதல் கட்டமாக, இத்திட்டத்தின் பெயர் அதிகாரப்பூர்வமாக 'திறன் தமிழ்நாடு' என மாற்றப்பட்டுள்ளது.

அரசின் இந்த புதிய கொள்கை முடிவின்படி, இத்திட்டத்திற்கான அதிகாரப்பூர்வ 'எக்ஸ்' சமூக வலைதளப் பக்கத்தின் பெயர் 'திறன் தமிழ்நாடு' என மாற்றப்பட்டுள்ளது.

பெயர் மாற்றத்தைத் தொடர்ந்து, கடந்த ஆட்சிக் காலத்தில் இத்திட்டத்தின் தொடக்க விழாக்கள், முந்தைய முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்ற நிகழ்வுகள், மாணவர்களுடன் கலந்துரையாடிய ஒளிப்படங்கள் மற்றும் காணொலிகள் அனைத்தும் அந்தப் பக்கத்தில் இருந்து முழுமையாக நீக்கப்பட்டுள்ளன.

புதிய அரசின் கல்வி மற்றும் திறன் மேம்பாட்டு முன்னுரிமைகளைத் தனித்துவமாக வெளிப்படுத்தும் நோக்கில் இந்த டிஜிட்டல் ஆவண நீக்கப் படலம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் துறை சார்ந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், மாணவர்களின் வேலைவாய்ப்பு மற்றும் போட்டித் தேர்வுக்கான பயிற்சிகள் புதிய பெயரின் கீழ் தங்கு தடையின்றித் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.