அரசு அலுவலக வங்கிக் கணக்கில் ஆன்லைனில் ரூ.11 லட்சம் அபேஸ்! நாகையில் அதிர்ச்சி
தனிநபர்களின் வங்கிக் கணக்குகளை குறிவைத்து ஆன்லைன் மோசடிகள் நடைபெற்று வரும் நிலையில், நாகப்பட்டினம் மாவட்டத்தில் அரசு அலுவலகத்தின் வங்கிக் கணக்கிலிருந்து சுமார் ரூ.11 லட்சம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் அரசு வங்கிக் கணக்கை மர்ம நபர்கள் இணையவழியில் ஊடுருவி, அதிலிருந்த பணத்தைத் திருடியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தச் சம்பவத்தின் பின்னணியில் கேரளாவைச் சேர்ந்த சைபர் குற்றக் கும்பல் இருக்கலாம் என முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், நாகை மாவட்டம் மட்டுமின்றி ராமநாதபுரம் உள்ளிட்ட பிற மாவட்டங்களிலும் அரசு அலுவலகங்களின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதுகுறித்து ஊரக வளர்ச்சித்துறை சார்பில் சென்னை சைபர் கிரைம் அலுவலகத்திலும், நாகப்பட்டினம் சைபர் கிரைம் போலீசாரிடமும் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
வங்கிக் கணக்குகளை ஊடுருவியது யார், பணம் எந்தக் கணக்குகளுக்கு மாற்றப்பட்டது, திருடப்பட்ட தொகையை மீட்க முடியுமா என்பது குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.