சிங்கப்பெண் படை பெண் காவலருக்கே பாலியல் தொல்லை - நயினார் நாகேந்திரன் கடும் கண்டனம்!
தமிழ்நாட்டுப் பெண்களின் பாதுகாப்பிற்காக ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழக அரசால் பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட 'சிங்கப்பெண் அதிரடிப் படை' பிரிவைச் சேர்ந்த பெண் காவலர் ஒருவருக்கே பாலியல் தொல்லை அளிக்கப்பட்டுள்ளதாக எழுந்துள்ள புகார் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் உள்ள பெண்களின் அவசரப் பாதுகாப்பு மற்றும் குற்றத் தடுப்புப் பணிகளுக்காகத் தவெக அரசு 'சிங்கப்பெண் அதிரடிப் படை' என்ற சிறப்புப் பெண் போலீஸ் பிரிவை அண்மையில் உருவாக்கியிருந்தது. பொதுமக்களான பெண்களுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டிய இந்தச் சிறப்புப் படையைச் சேர்ந்த ஒரு பெண் காவலருக்கே பாலியல் ரீதியான தொல்லைகள் கொடுக்கப்பட்டிருப்பது காவல் துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரம் குறித்து பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், "தமிழ்நாட்டுப் பெண்களைப் பாதுகாப்போம் என்று கூறி உருவாக்கப்பட்ட சிங்கப்பெண் படையைச் சேர்ந்த பெண் காவலருக்கே இந்த தவெக ஆட்சியில் பாதுகாப்பு இல்லாத அவலநிலை நீடிக்கிறது" என்று விமர்சித்துள்ளார்.
முதலமைச்சர் விஜய்யின் பெண் பாதுகாப்பு முழக்கங்களைச் சுட்டிக்காட்டி நயினார் நாகேந்திரன் சில காரசாரமான கேள்விகளை எழுப்பியுள்ளார். "பொதுமேடைகளில் பேசும் போதெல்லாம் தமிழகப் பெண்களைப் பார்த்து 'நான் உங்கள் அண்ணன், தம்பி' என்று உணர்வுப்பூர்வமாக முழக்கமிடும் முதலமைச்சர் விஜய், தற்போது தனது சொந்தக் காவல் துறையிலேயே பெண் காவலருக்கு நடந்துள்ள இந்த அவலத்திற்கு முதலில் பதில் சொல்ல வேண்டும். இந்தப் புகாரை எவ்வித அரசியல் தலையீடும் இன்றித் தீர விசாரித்து, சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது உடனடியாகக் கடுமையான சட்டப்படியான நடவடிக்கைகளை எடுக்க முதலமைச்சர் உத்தரவிட வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.