கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ.17.15 கோடி மோசடி… முன்னாள் செயலாளர் உட்பட 4 பேர் கைது!

 

 

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ.17.15 கோடி நிதி மோசடி செய்ததாக முன்னாள் செயலாளர் உள்ளிட்ட 4 பேரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

நாகர்கோவில் புறநகர் பகுதியான ஊட்டுவாழ்மடத்தில் கடந்த 1960-ம் ஆண்டு முதல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்தில் சுமார் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக உள்ளனர்.

இங்கு 2014-ம் ஆண்டு முதல் 2024-ம் ஆண்டு வரையிலான 10 ஆண்டுகளில் விவசாயக் கடன், பயிர்க்கடன் மற்றும் சுயஉதவிக் குழுக்களுக்கான கடன்கள் வழங்கியதில் முறைகேடுகள் நடந்ததாக புகார்கள் எழுந்தன. மேலும், சங்கத்தில் வைப்புத்தொகை செலுத்திய பொதுமக்கள் முதிர்வுத் தொகையை திரும்பப் பெற முடியாமல் தவித்ததாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில், பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். சங்கத்தின் வரவு-செலவு ஆவணங்களை ஆய்வு செய்ததில், போலி ஆவணங்கள் மற்றும் கணக்குகளில் திருத்தங்கள் செய்ததன் மூலம் ரூ.17.15 கோடி மோசடி செய்யப்பட்டதாகத் தெரியவந்தது.

இதையடுத்து, முன்னாள் செயலாளர் தேவசகாயம் பால்ராஜ் (64), உதவிச் செயலாளர்கள் நடராஜ் (63), பூதலிங்கம் பிள்ளை (63), எழுத்தர் விஜயகுமாரி (68) ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மோசடி செய்யப்பட்ட பணத்தை மீட்பதுடன், இந்த முறைகேட்டில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.