யூடியூபர் மதுமிதா வீட்டில் 118 சவரன் நகைகள் கொள்ளை! கதவை அறுத்து கைவரிசை!

 

 

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே யூடியூபர் மதுமிதாவின் கணவர் வினோத்குமார் வீட்டில் 118 சவரன் தங்க நகைகள் மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தம்மத்துக்கோணம் விஐபி கார்டன் காலனியில் வினோத்குமார் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். நேற்று மாலை அவர் தனது மனைவி மதுமிதா மற்றும் குடும்பத்தினருடன் வெளியே சென்றிருந்ததாக கூறப்படுகிறது. பின்னர் இரவு வீடு திரும்பியபோது, படுக்கையறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

பீரோவில் வைக்கப்பட்டிருந்த 118 சவரன் தங்க நகைகள் மற்றும் பணம் திருடப்பட்டிருந்ததாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. வீட்டின் பின்பக்க கதவின் பூட்டை கட்டிங் மெஷின் மூலம் அறுத்து மர்மநபர்கள் உள்ளே நுழைந்ததாக போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையடுத்து ராஜாக்கமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள CCTV கேமரா காட்சிகளையும் போலீசார் கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர். கொள்ளையில் ஈடுபட்டவர்களை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

கொள்ளையடிக்கப்பட்ட நகைகளின் மதிப்பு மற்றும் திருடப்பட்ட பணத்தின் முழு விவரம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்பத்தினர் வீட்டில் இல்லாத நேரத்தை பயன்படுத்தி மர்மநபர்கள் இந்த கொள்ளையில் ஈடுபட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.இந்த சம்பவம் தம்மத்துக்கோணம் விஐபி கார்டன் காலனி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.