"தெருமுனை பேச்சாளர் போல் பேசுகிறார்" - நயினார் நாகேந்திரனின் சர்ச்சைப் பேச்சுக்கு அமைச்சர் ராஜ்மோகன் கண்டனம்!
தமிழக முதலமைச்சர் விஜய் குறித்துப் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அநாகரிகமான முறையில் பேசியதாகக் கூறி, தமிழகப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.
கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஊடகங்களிடம் பேசிய பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) செயல்பாடுகள் மற்றும் முதலமைச்சர் விஜய்யைக் விமர்சிக்கும் வகையில் "அப்பா எங்கே? என அம்மாவிடம் போய் கேளுங்கள்" என சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்திருந்தார்.
நயினாரின் இந்த பேச்சுக்கு அரசியல் களத்தில் எதிர்ப்பு கிளம்பிய சூழலில், முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை உட்பட பலரும் இந்த அநாகரிகப் பேச்சுக்குத் தங்களது கண்டனத்தைப் பதிவு செய்தனர்.
நயினார் நாகேந்திரனின் பேச்சு குறித்துச் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜ்மோகன், "பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் ஒரு பொறுப்பான அரசியல் தலைவரைப் போலப் பேசாமல் தெருமுனைப் பேச்சாளரைப் போல் பேசியுள்ளார். அவரது இந்த வார்த்தைகள் அரசியல் நாகரிகத்திற்கு சற்றும் ஏற்புடையதல்ல" எனக் கடுமையாகச் சாடினார். மேலும் தொடர்ந்த அவர், "அரசியலில் இதுவரை மறைமுகமாக இருந்த நட்புகள் அனைத்தும் வெளிப்படும் நேரம் தற்போது வந்துவிட்டது" என்று சுட்டிக்காட்டினார்.
முதலமைச்சர் மற்றும் அவரது குடும்பத்தினரைப் பற்றித் தனிப்பட்ட முறையில் அவதூறாகப் பேசிய நயினார் நாகேந்திரன் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வலியுறுத்தித் தவெக தரப்பிலும் காவல்துறைத் தலைமை இயக்குநரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.