கோவையில் நிர்வாண நிலையில் இளம்பெண் சடலம் - பலாத்காரம் செய்து கொலையா? யார் அந்த ‘ஜெகன்’?!
கோவை மதுக்கரை அருகே உள்ள அடர்ந்த காட்டுப்பகுதியில் சுமார் 25 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவரின் சடலம் நிர்வாண நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. தமிழகக் காவல் துறையில் சட்டம் ஒழுங்கை மேம்படுத்த 15 அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்ட மறுநாளே, கோவையில் இந்தத் துயரச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
மதுக்கரை வனப்பகுதியை ஒட்டிய பகுதியில் பெண் ஒருவரின் சடலம் கிடப்பதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், மதுக்கரை காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலைக் கைப்பற்றினர். உயிரிழந்த பெண்ணின் ஒரு கையில் 'ஜெகன்' என்றும், மற்றொரு கையில் ஆங்கில எழுத்துக்களான 'S', 'J' ஆகிய எழுத்துக்களும் பச்சை குத்தப்பட்டுள்ளன.
சடலம் நிர்வாண நிலையில் மீட்கப்பட்டுள்ளதால், அந்தப் பெண் மர்ம நபர்களால் கடத்தி வரப்பட்டு, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுப் பின்னர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனப் போலீசார் பலத்த சந்தேகம் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த பெண் யார், அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர் மற்றும் அவரது கையில் பச்சை குத்தப்பட்டுள்ள 'ஜெகன்' என்ற நபர் யார் என்பது குறித்துக் கோவையின் பல்வேறு பகுதிகளில் காணாமல் போன பெண்களின் பட்டியலை வைத்துப் போலீசார் முதற்கட்ட விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.
பெண்ணின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மருத்துவ அறிக்கை வந்த பின்னரே, அந்தப் பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டாரா மற்றும் அவர் எப்படிப் படுகொலை செய்யப்பட்டார் என்ற முழுமையான விபரங்கள் தெரியவரும் என மதுக்கரை போலீசார் தெரிவித்துள்ளனர்.