தோழர் நல்லகண்ணு மறைவு… “நாம் வாழ்ந்த காலம் பெருமை” – முதல்வர் உருக்கம்!
முதுபெரும் தலைவர் நல்லகண்ணு மறைவுற்ற செய்தி கடும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தனது சமூக வலைதளப் பதிவில், “எனக்கு ஒரு கண்ணில் பார்வை இல்லை என்றாலும் அகத்தில் மற்றொரு கண் இருக்கிறது; அதுதான் நல்லகண்ணு” என மு. கருணாநிதி கூறியதை நினைவுகூர்ந்தார். சமரசமற்ற போராளி, பாட்டாளி வர்க்க நலனுக்காக வாழ்நாளை அர்ப்பணித்த தியாகி என அவர் புகழஞ்சலி செலுத்தினார்.
சிறை, சித்திரவதை உள்ளிட்ட பல இடர்களையும் தாங்கி கொள்கையில் உறுதியாக நின்றவர் நல்லகண்ணு என முதல்வர் குறிப்பிட்டார். பொதுவுடைமையும் திராவிட இயக்கக் கருத்தியலும் சமூக மாற்றத்திற்கான சக்திகள் என்ற நம்பிக்கையில் அவர் உறுதியுடன் இருந்ததாகவும் தெரிவித்தார். கலைஞர் ஆட்சியில் அம்பேத்கர் விருது வழங்கப்பட்டதையும், தற்போதைய ஆட்சியில் தகைசால் தமிழர் விருது வழங்கியதையும் நினைவுபடுத்தினார்.
வாழ்நாளில் பெற்ற விருதுகளின் தொகையையே மக்களுக்காக ஒப்படைத்த அப்பழுக்கற்ற தலைவர் என அவர் பாராட்டினார். நல்லகண்ணு வாழ்ந்த காலத்தில் நாம் வாழ்ந்ததே பெருமை என கூறிய முதல்வர், முழு அரசு மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்தப்படும் என்றும் அறிவித்தார். அவரது நினைவு என்றும் மக்கள் மனதில் நிலைத்திருக்கும் என உருக்கமாக தெரிவித்துள்ளார்.