நாமக்கல்: திருமணப் பரிசாக மனைவிக்கு நிலவில் 1 ஏக்கர் நிலம் வாங்கித் தந்த இளைஞர்!
நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது வருங்கால மனைவிக்குத் திருமணப் பரிசாக நிலாவில் நிலம் வாங்கி அசத்தியுள்ள நிலையில், இது சட்டப்பூர்வமாக சாத்தியமா என்பது குறித்து விவரிக்கிறது இந்தச் செய்தி.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த நாமகிரிப்பேட்டையைச் சேர்ந்த கட்டிடப் பொறியாளர் அசோக் சரவணன் (32), தனது வருங்கால மனைவி ராதிகா (என்ற வர்ஷினி) என்பவரைத் செப்டம்பர் 17-ஆம் தேதி திருமணம் செய்ய உள்ளார். வழக்கமான நகைகள் மற்றும் கார்களுக்குப் பதிலாக, லண்டனில் உள்ள தனது சகோதரியின் உதவியுடன் ஆன்லைன் மூலம் நிலாவில் 1 ஏக்கர் நிலத்தை அவர் பரிசாக வாங்கியுள்ளார். இந்த வித்தியாசமான பரிசைக் கண்டு உறவினர்களும் பொதுமக்களும் ஆச்சரியமடைந்துள்ளனர்.
ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச விண்வெளி ஒப்பந்தத்தின்படி, நிலவு மற்றும் விண்வெளியில் உள்ள எந்தவொரு கோளும் மனிதகுலத்தின் பொதுவான சொத்தாகும். எந்தவொரு நாடோ, தனிநபரோ அல்லது தனியார் நிறுவனமோ விண்வெளியில் சொந்தம் கொண்டாடவோ உரிமை கோரவோ முடியாது.
இணையத்தில் 'Lunar Registry' மற்றும் 'Lunar Embassy' போன்ற சில வெளிநாட்டுத் தனியார் நிறுவனங்கள் பணம் பெற்றுக்கொண்டு நிலவுக்கான 'பட்டா அல்லது சான்றிதழ்' வழங்கி வருகின்றன. ஆனால், இந்த ஆவணங்களுக்குச் சர்வதேச சட்டத்திலோ அல்லது இந்திய சட்டத்திலோ எந்தவிதமான சட்டப்பூர்வ மதிப்பும் கிடையாது. சுருக்கமாகச் சொன்னால், கையில் கொடுக்கப்படும் வெறும் காகிதச் சான்றிதழுக்காகப் பணத்தை முதலீடு செய்து ஏமாறும் ஒரு நவீன கால நிகழ்வாகவே இது பார்க்கப்படுகிறது.