புதிய மெட்ரோ ரயில் நிலையங்களின் பெயர்கள் மாற்றம் !
சென்னை கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி புறவழிச்சாலை வரை 26.1 கிலோ மீட்டர் தூரத்திற்கு 4 வது வழித்தட மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதில் பூந்தமல்லி புறவழிச்சாலையிலிருந்து போரூர் வரையிலான சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்திற்குப் பணிகள் முழுமையாக நிறைவடைந்து விரைவில் ரயில்கள் இயக்கப்படும் நிலையில் உள்ளன. அதே நேரத்தில் போரூர் முதல் வடபழனி வரையிலான இடைப்பட்ட நிலையங்களின் பணிகள் இன்னும் முடிவடையாததால், தொடக்கத்தில் அந்த நிலையங்களில் நிற்காமல் ரயில்களை இயக்க மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில், புதிய வழித்தடங்களில் அமையவிருக்கும் சில முக்கிய மெட்ரோ ரயில் நிலையங்களின் பெயர்களை மாற்றம் செய்து தமிழக அரசு தற்பொழுது புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது. அதன்படி, 4 வது வழித்தடத்தில் உள்ள சாலிகிராமம் வேர் ஹவுஸ் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு 'விருகம்பாக்கம் தெற்கு மெட்ரோ' என்று புதிய பெயர் சூட்டப்பட்டுள்ளது. அதேபோல் மாதவரம் பால் பண்ணை முதல் சோழிங்கநல்லூர் வரை 44.6 கிலோ மீட்டர் தூரத்திற்கு அமையவிருக்கும் 5 வது வழித்தடத்தில் உள்ள விருகம்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு 'விருகம்பாக்கம் வடக்கு மெட்ரோ' என்றும் பெயர் மாற்றப்பட்டுள்ளது.
விருகம்பாக்கம் பகுதியில் அடுத்தடுத்து இரண்டு வெவ்வேறு வழித்தடங்களில் நிலையங்கள் அமைவதால் குழப்பத்தைத் தவிர்க்க வேண்டும் என்ற பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்றே இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மெட்ரோ ரயில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த 5 வது வழித்தடமானது மாதவரம், பெரம்பூர், வில்லிவாக்கம், கோயம்பேடு மற்றும் ஆலந்தூர் வழியாகச் சென்னை மாநகரத்தின் முக்கியப் பகுதிகளை இணைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அரசின் இந்தத் தெளிவான பெயர் மாற்ற நடவடிக்கை பயணிகளுக்கு எதிர்காலத்தில் பெரும் வசதியாக இருக்கும் எனப் பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.