நான் இன்னமும் தவெகவில் தாம்பா இருக்கேன்... நாஞ்சில் சம்பத் பளிச்!

 

 

தமிழக வெற்றிக் கழகத்தில் இருந்து நாஞ்சில் சம்பத் விலகி, நடிகர் தனுஷ் அமைப்பில் இணைந்துவிட்டதாக சமூக வலைதளங்களில் பரவிய தகவலுக்கு அவர் விளக்கம் அளித்துள்ளார். தான் இன்னமும் தவெகவில்தான் இருப்பதாக நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் பரப்புரைச் செயலாளராக செயல்பட்டு வரும் நாஞ்சில் சம்பத், சமீபத்தில் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அவர் தவெக மீது அதிருப்தியில் இருப்பதாகவும், விரைவில் கட்சியில் இருந்து விலகலாம் என்றும் பல்வேறு தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவின.

இந்த நிலையில், நாஞ்சில் சம்பத் தவெகவில் இருந்து விலகி நடிகர் தனுஷ் அமைப்பில் இணைந்துவிட்டதாக கூறி புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது.இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள நாஞ்சில் சம்பத், தனுஷ் அமைப்பில் தான் இணைந்துவிட்டதாக பரப்பப்படும் தகவல் முற்றிலும் தவறானது என்று தெரிவித்துள்ளார்.மேலும், இதுபோன்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும், தான் இன்னமும் தமிழக வெற்றிக் கழகத்தில்தான் தொடர்ந்து இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாஞ்சில் சம்பத் தவெகவில் கடந்த 2025-ம் ஆண்டு டிசம்பர் மாதம் இணைந்தார். இதையடுத்து அவருக்கு அக்கட்சியின் பரப்புரைச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது.இதற்கிடையே, மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல் பிரசாரத்திற்கு நாஞ்சில் சம்பத்துக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என தகவல்கள் வெளியாகின.

இதைத் தொடர்ந்து அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட “போனால் போகட்டும் போடா...” என்ற பதிவு அரசியல் வட்டாரத்தில் பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியது.இந்த சூழலில், அவர் தவெகவில் இருந்து விலகிவிட்டதாக பரவிய தகவலுக்கு தற்போது நாஞ்சில் சம்பத் விளக்கம் அளித்துள்ளதால், கட்சி மாறியதாக வெளியான வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.