எல்லாவற்றிலும் கோட்டைவிட்டு கொள்ளையடித்த கூட்டம் - நாஞ்சில் சம்பத் காட்டம்

 

அதிமுகவிலிருந்து விலகிய முக்கிய நிர்வாகிகள் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து வரும் நிலையில், திமுக மற்றும் தவெக இடையேயான அரசியல் வார்த்தைப் போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. தவெகவின் புதிய அரசை விமர்சித்த உதயநிதி ஸ்டாலினுக்கு, தவெக பரப்புரை செயலாளர் நாஞ்சில் சம்பத் தனது எக்ஸ் பக்கத்தில் பதிலடிக் கொடுத்துள்ளார்.

"கோட்டு சூட்டு போடுவது பிரச்சனை இல்லை; கோட்டை விடுவதுதான் பிரச்சனை என்று உதயநிதி உளறிக்கொட்டியிருக்கிறார். புதிய அரசு எந்த இடத்தில், எந்த நிர்வாகத்தில் கோட்டை விட்டது என்று சொல்வதற்கு இவர்களுக்கு ஏதேனும் துப்பு உண்டா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

தற்போதைய புதிய அரசின் திட்டங்களால் மக்கள் அடைந்து வரும் மகிழ்ச்சியைக் கண்டு திமுகவினர் பொறுத்துக் கொள்ள முடியாமல் பேசி வருவதாக நாஞ்சில் சம்பத் குறிப்பிட்டுள்ளார்.

"தற்போதைய அரசின் மக்கள் நலச் செயல்பாடுகளால் தமிழ்நாட்டின் லட்சக்கணக்கான மக்கள் பெரும் மகிழ்ச்சியடைந்து வருகிறார்கள். மக்கள் மகிழ்ச்சியாக இருக்கும் இந்த நல்லாட்சிக்கு பெயர் கோட்டைவிட்டதா? எல்லாவற்றிலும் கோட்டைவிட்டு, கொள்ளையடித்த கூட்டத்தினர் தற்பொழுது தங்களின் தோல்வி பயத்தால் வரும் எரிச்சலில் பேசுவதை எந்தத் தமிழனும் கேட்பதற்குத் தயாராக இல்லை" என நாஞ்சில் சம்பத் திமுகவை நேரடியாக "கொள்ளையடித்த கூட்டம்" எனச் சாடியிருப்பது, தமிழக அரசியல் களத்தில் விவாதங்களை மேலும் சூடாக்கியுள்ளது.