75 செ.மீ நீளமுள்ள பழங்கால யானையின் கீழ்த்தாடைப் புதைபடிவம்!
மத்தியப் பிரதேச மாநிலம் நர்மதை ஆற்றங்கரையில், 75 செ.மீ நீளமுள்ள வரலாற்றுக்கு முந்தைய யானையின் கீழ்த்தாடைப் புதைபடிவம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பிரம்மாண்ட யானை இனத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
ராய்சென் மாவட்டம் தியோரி தாலுகாவில் உள்ள பத்தாய் கிராமத்தின் நர்மதை ஆற்றுப் படித்துறையில் கடந்த 10-ம் தேதி சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது மண் அரிப்பால் வெளியே தெரிந்த பல் போன்ற அமைப்பைக் கவனித்தனர். கிராம மக்கள் தோண்டிப் பார்த்தபோது 75 செ.மீ நீளமும், 25 செ.மீ அகலமும் கொண்ட யானையின் கீழ்த்தாடை புதைபடிவம் தெரியவந்தது.
ஆரம்பத்தில் இது சுமார் 65 லட்சம் ஆண்டுகளுக்கு முந்தைய 'ஸ்டெகோடான் நமாடிகஸ்' இனத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம் எனக் கருதப்பட்டது. ஆனால், பற்களின் அமைப்பு மற்றும் மண் அடுக்குகளை ஆய்வு செய்த நிபுணர்கள், அழிந்துபோன பிரம்மாண்ட யானை இனமான 'பேலியோலோக்சோடான்' இனத்தைச் சேர்ந்ததாக இருக்க அதிக வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
இதன் உண்மையான காலம் மற்றும் இனத்தை உறுதிப்படுத்த கூடுதல் அறிவியல் ஆய்வுகள் தேவைப்படுகின்றன. புதைபடிவம் சேதமடையாமல் இருக்க அப்பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.