இன்று டெல்லியில் மாநில நீர்வளத்துறை செயலாளர்களுக்கான தேசிய மாநாடு தொடக்கம்!
மத்திய அரசின் ஜல் சக்தி அமைச்சகத்தின் சார்பில், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் நீர்வளத் துறைகளின் மூத்த செயலாளர்களுக்கான அகில இந்தியத் தேசிய மாநாடு இன்று டெல்லியில் நடைபெறுகிறது. நாட்டில் உள்ள நீர் ஆதாரங்களைப் பாதுகாப்பது மற்றும் மேலாண்மை செய்வது குறித்த முக்கிய ஆலோசனைகளுக்காக இந்த மாநாடு கூட்டப்பட்டுள்ளது.
டெல்லியில் உள்ள சுஷ்மா சுவராஜ் பவனில் அமைந்துள்ள சாணக்யா அரங்கில் இந்த மாநாடு இன்று நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த தேசிய மாநாட்டிற்கு மத்திய ஜல் சக்தித்துறை அமைச்சர் சி.ஆர்.பாட்டீல் தலைமை தாங்கி, மாநாட்டு உரையை நிகழ்த்துகிறார்.
இந்த அகில இந்திய மாநாட்டில், நாட்டின் நீர்வளத் துறையில் தற்போதைய சூழலில் உடனடியாக முன்னுரிமை அளிக்க வேண்டிய பல்வேறு முக்கிய முன்முயற்சிகள் மற்றும் திட்டங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட உள்ளது. மாநிலங்களுக்கு இடையேயான நீர் மேலாண்மை, நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்துதல் மற்றும் மத்திய அரசின் நீர்நிலை மேம்பாட்டுத் திட்டங்களை மாநில அளவில் திறம்படச் செயல்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு உத்திகள் குறித்து இந்த மாநாட்டில் ஆலோசிக்கப்படவுள்ளது.