நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கக் கால அவகாசம் நீட்டிப்பு - தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!

 

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் (NEET UG - 2026) நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தைத் தேசிய தேர்வு முகமை (NTA) நீட்டித்துள்ளது. 

2026-ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க நேற்று மார்ச் 8ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தொழில்நுட்பக் கோளாறுகள் மற்றும் மாணவர்களின் கோரிக்கையை ஏற்று, விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை NTA தற்போது நீட்டித்துள்ளது. நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க மார்ச் 11ம் தேதி இரவு 9 மணி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. விண்ணப்பக் கட்டணத்தை மார்ச் 11-ஆம் தேதி இரவு 11:50 மணி வரை ஆன்லைனில் செலுத்தலாம்.

விண்ணப்பங்களில் திருத்தங்களைச் செய்ய மார்ச் 10 முதல் மார்ச் 12-ஆம் தேதி வரை வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னரே அறிவித்தபடி, நீட் தேர்வு 2026 மே 3-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும்.

தகுதியுள்ள மாணவர்கள் தேசிய தேர்வு முகமையின் அதிகாரப்பூர்வ இணையதளமான neet.nta.nic.in அல்லது nta.ac.in வழியாக ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். கடைசி நேரத் தொழில்நுட்பச் சிக்கல்களைத் தவிர்க்க, மாணவர்கள் இந்த நீட்டிக்கப்பட்ட கால அவகாசத்தைப் பயன்படுத்தி முன்கூட்டியே விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதற்கு மேல் கால அவகாசம் வழங்கப்பட மாட்டாது என்றும் NTA தெளிவுபடுத்தியுள்ளது.