நீட் தேர்வு மோசடி, வதந்திகளைப் புகாரளிக்கப் புதிய இணையதளம் - தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!
கடந்த மே மாதம் நாடு முழுவதும் நடத்தப்பட்டு, வினாத்தாள் கசிவு புகாரால் ரத்து செய்யப்பட்ட நீட் நுழைவுத் தேர்வுக்கான மறு தேர்வு வரும் ஜூன் 21-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுகளும் வெளியிடப்பட்டுள்ளன.
இந்நிலையில், மறு தேர்வு தொடர்பாகச் சமூக வலைத்தளங்களில் பரவும் மோசடி அறிவிப்புகள் மற்றும் வதந்திகளைத் தடுத்து, தேர்வின் நம்பகத்தன்மையைக் காக்கும் பொருட்டுப் புகாரளிக்கப் புதிய பிரத்யேக இணையதளத்தைத் தேசிய தேர்வு முகமை அறிமுகப்படுத்தியுள்ளது.
நீட் தேர்வு வினாத்தாள் தங்களுக்கு முன்கூட்டியே கிடைக்கும் என்று கூறிப் பணம் பறிக்க முயலும் மோசடிக் கும்பல், போலி இணையதளங்கள் மற்றும் சமூக ஊடக கணக்குகள் குறித்துப் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் உடனடியாகப் புகாரளிக்கத் தகுந்த தளம் உருவாக்கப்பட்டுள்ளது.
தேர்வர்கள் மற்றும் பெற்றோர் தங்களுக்குத் தெரியவரும் மோசடிகள் குறித்து https://innovateindia.mygov.in/neet-ug-2026/ என்ற புதிய இணையதளப் பக்கத்தில் ஆதாரங்களுடன் புகாரைப் பதிவு செய்யலாம். இதுதவிர, தேசிய தேர்வு முகமையின் அதிகாரப்பூர்வ தளங்களான https://www.nta.ac.in/ மற்றும் https://neet.nta.nic.in/ ஆகியவற்றின் மூலமாகவும் தங்களது தகவல்களைப் பகிர்ந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வினாத்தாள் கசிவு, போலியான நபர்கள் தங்களை என்.டி.ஏ அதிகாரிகள் என்று கூறி ஏமாற்றுவது போன்ற செயல்களில் ஈடுபட்டால், இந்தத் தளத்தில் ஸ்கிரீன்ஷாட் அல்லது லிங்க்குகளை ஆதாரமாகப் பதிவேற்றலாம்.
மே மாதம் தேர்வு எழுதி ரத்து செய்யப்பட்டுள்ள பழைய தேர்வுக்கான கட்டணத்தைத் தேர்வர்களுக்குத் திருப்பித் தரும் நடவடிக்கைகளையும் என்.டி.ஏ தொடங்கியுள்ளது. பணம் திரும்பப் பெறும் நடைமுறையின் போது மாணவர்கள் ஏமாற்றப்படுவதைத் தடுக்கப் பின்வரும் முக்கிய வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.
தேர்வுக் கட்டணத்தை இணையதளம் மூலம் திரும்பப் பெறும்போது, தேர்வர்களிடம் எக்காரணம் கொண்டும் 'ஓடிபி' எண்கள் கேட்கப்படாது. செலுத்தப்பட்ட பணம் நேரடியாகத் தேர்வர்களின் வங்கிக் கணக்கிற்கு வந்து சேரும் என்பதால், ஓடிபி அல்லது வங்கி விவரங்களைக் கேட்கும் மோசடியான போலி அழைப்புகள், குறுஞ்செய்திகள் மற்றும் தேவையற்ற இணைப்புகளை நம்பி தேர்வர்கள் ஏமாற வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகையைத் திரும்பப் பெற தேர்வர்களுக்குக் கூடுதல் கட்டணம் எதுவும் கிடையாது.
ஒருவேளை ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது தங்களது வங்கிக் கணக்கு எண்ணைத் தவறுதலாகப் பதிவிட்ட தேர்வர்களுக்கு, அதனைத் திருத்திக் கொள்ள மீண்டும் ஒரு வாய்ப்பு அளிக்கப்படும். இந்த வாய்ப்பானது ஜூன் 21 மறு தேர்வு முடிந்த பின்னர் வழங்கப்படும் என்று தேசிய தேர்வு முகமை தெளிவுபடுத்தியுள்ளது.