நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலையை அதிரடியாக உயர்த்தியது நயாரா எனர்ஜி நிறுவனம் - வாகன ஓட்டிகளுக்கு அதிர்ச்சி!
நாடு முழுவதும் உள்ள தனது பெட்ரோல் பங்குகளில் எரிபொருள் விலையை நயாரா எனர்ஜி நிறுவனம் திடீரென உயர்த்தியுள்ளது. சர்வதேச சந்தை நிலவரங்களைக் காரணம் காட்டி இந்த விலை உயர்வு கொண்டுவரப்பட்டுள்ளது.
நயாரா எனர்ஜி நிறுவனத்தின் பங்குகளில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.5 வரையிலும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.3 வரையிலும் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த புதிய விலை உயர்வானது இந்தியா முழுவதும் உள்ள நயாரா நிறுவனத்தின் 7,108 பெட்ரோல் பங்குகளில் சனிக்கிழமை (அக்டோபர் 3) அதிகாலை முதல் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.
இதனிடையே, இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் உள்ளிட்ட பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் தங்களது விற்பனை நிலையங்களில் எரிபொருள் விலையில் எந்த மாற்றமும் செய்யாமல் பழைய விலையிலேயே வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட எரிபொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதாலும், கொள்முதல் செலவிற்கும் சில்லறை விற்பனை விலைக்கும் இடையேயான இடைவெளியைக் குறைக்கும் நோக்கிலுமே இந்த விலை திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நயாரா எனர்ஜி நிறுவனம் தெரிவித்துள்ளது.