18,300 அடி உயர இமயமலை கணவாய்! 30 நாட்களில் 250 கி.மீ. பயணம்... 20 NCC மாணவிகள் சாதனை!
Sep 16, 2026, 20:45 IST
இமயமலையின் மிகக் கடினமான உயரமான பாதைகளை கடந்து 20 தேசிய மாணவர் படை (NCC) மாணவிகள் 30 நாள் சாகசப் பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளனர். ‘அபராஜிதா - பராங் லா 2026’ என்ற பெயரில் நடைபெற்ற இந்த பயணத்தில் சுமார் 250 கி.மீ. தூரத்தை மாணவிகள் கடந்துள்ளனர்.
இமாச்சலப் பிரதேசத்தின் ஸ்பிதி பள்ளத்தாக்கில் உள்ள கிப்பர் பகுதியில் இருந்து இந்தப் பயணம் தொடங்கியது. அங்கிருந்து லடாக்கின் சாங்தாங் பகுதியில் உள்ள கர்சாக் வரை மாணவிகள் சென்றுள்ளனர்.இந்தப் பயணத்தின் முக்கிய சவால் 5,578 மீட்டர் (சுமார் 18,300 அடி) உயரத்தில் உள்ள பராங் லா கணவாய் ஆகும். இது ஸ்பிதி பள்ளத்தாக்கையும் லடாக்கின் சாங்தாங் பகுதியையும் இணைக்கும் உயரமான மலைப்பாதையாகும்.
30 நாட்கள் நடைபெற்ற இந்த சாகசப் பயணத்தில் பனிப்பாறைகள், பனிப்பரப்புகள், ஆற்றுப்பள்ளத்தாக்குகள் உள்ளிட்ட கடினமான நிலப்பரப்புகளை மாணவிகள் கடந்து சென்றுள்ளனர்.கடுமையான குளிர் மற்றும் உயரமான மலைப்பகுதிகளில் நிலவும் சவால்களுக்கு மத்தியிலும் இந்த 20 பேர் கொண்ட குழு பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. அவர்களுடன் NCC அதிகாரிகள், பயிற்சியாளர்கள், மருத்துவக் குழுவினர் மற்றும் உதவிக் குழுவினரும் சென்றுள்ளனர்.