சுழற்சியை மாற்றி 8 ஆண்டுகளிலேயே பூத்துக் குலுங்கும் நீலக்குறிஞ்சி மலர்கள் - கொடைக்கானல், ஊட்டியில் குவியும் சுற்றுலா பயணிகள்!

 

பொதுவாக 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் அரிய வகை நீலக்குறிஞ்சி மலர்கள், தனது வழக்கமான சுழற்சியை மாற்றி 8 ஆண்டுகளிலேயே நீலகிரி, கொடைக்கானல் மற்றும் மூணாறு உள்ளிட்ட மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தற்போது பூத்துக் குலுங்கத் தொடங்கியுள்ளன.

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளின் தனித்துவமான அடையாளமாகக் கருதப்படும் குறிஞ்சி மலர்கள் கடந்த 2018 ஆம் ஆண்டு பெருமளவில் பூத்திருந்தன. வழக்கமாக 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை அதாவது 2030-ல் தான் இவை பூக்க வேண்டும். ஆனால், காலநிலை மாற்றங்கள் மற்றும் சுற்றுச்சூழல் காரணங்களால், 8 ஆண்டுகளிலேயே தற்போது இந்த மலர்கள் பூத்துக் குலுங்குவது இயற்கை ஆர்வலர்களையும் பொதுமக்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

நீல நிறத்தில் மலைப்பகுதிகள் முழுவதும் கம்பளம் விரித்தது போன்ற இந்தக் காட்சரிகளைக் காண நீலகிரி, கொடைக்கானல் மற்றும் மூணாறு பகுதிகளுக்குச் சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் குவியத் தொடங்கியுள்ளனர்.

குறிஞ்சி மலர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு வனத்துறை எச்சரிக்கைகளை விடுத்துள்ளது. அதன்படி, சுற்றுலாப் பயணிகள் யாரும் பூக்களைப் பறிக்கவோ, கால்களால் மிதிக்கவோ அல்லது அப்பகுதியில் நெகிழிப் பொருட்களை வீசவோ கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வனத்துறையின் இந்த விதிகளை மீறுவோருக்கு 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அல்லது ரூ.25,000 வரை அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இயற்கையின் பொக்கிஷமான இந்த அரிய மலர்களைப் பாதுகாக்க அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என வனத்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.