28 ஹிட்கள்... தங்கம்! ஆசிய விளையாட்டில் நீரு தண்டா புதிய சாதனை
ஜப்பானில் நடைபெற்று வரும் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு துப்பாக்கிச்சுடுதல் பிரிவில் மேலும் ஒரு தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது. பெண்களுக்கான தனிநபர் டிராப் பிரிவில் இந்திய வீராங்கனை நீரு தண்டா தங்கம் வென்று வரலாறு படைத்துள்ளார்.இறுதிப் போட்டியில் நீரு தண்டா 28 ஹிட்களை பதிவு செய்து முதலிடம் பிடித்தார். இதன் மூலம் பெண்கள் தனிநபர் டிராப் பிரிவில் ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். அவரது 28 ஹிட்கள் புதிய ஆசிய சாதனையாகவும் அமைந்துள்ளது. இதற்கு முந்தைய சாதனை 24 ஹிட்களாக இருந்தது.
சீனாவின் சன் யுனோங் 26 ஹிட்களுடன் வெள்ளிப் பதக்கத்தையும், குவைத்தின் ஹஜர் அப்துல்மாலிக் 21 ஹிட்களுடன் வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.நீரு தண்டாவுக்கு இந்த ஆசிய விளையாட்டுப் போட்டி இரட்டை மகிழ்ச்சியை அளித்துள்ளது. முன்னதாக நடைபெற்ற பெண்கள் டிராப் அணிப் பிரிவில் நீரு தண்டா, ஆஷிமா அஹ்லாவத் மற்றும் மனிஷா கீர் ஆகியோர் இணைந்து இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கம் பெற்றுத் தந்தனர். அந்த அணியில் நீரு தண்டா 118 ஹிட்களுடன் சிறப்பாக செயல்பட்டதுடன், தனிநபர் தகுதிச் சுற்றிலும் முதலிடத்தில் இருந்தார்.
இதன் மூலம் ஒரே ஆசிய விளையாட்டுப் போட்டியில் நீரு தண்டா வெள்ளி மற்றும் தங்கம் என இரட்டை பதக்கங்களை கைப்பற்றியுள்ளார்.இந்திய துப்பாக்கிச்சுடுதல் வரலாற்றிலும் அவரது சாதனை முக்கியத்துவம் பெற்றுள்ளது. 1978-ம் ஆண்டு பாங்காக்கில் நடைபெற்ற ஆசிய விளையாட்டில் ஆடவர் டிராப் பிரிவில் ராஜா ரந்தீர் சிங் இந்தியாவுக்காக தங்கம் வென்றிருந்தார். அதன் பிறகு டிராப் பிரிவில் தனிநபர் தங்கம் வென்ற இந்தியராக நீரு தண்டா புதிய அத்தியாயத்தை உருவாக்கியுள்ளார்.
26 வயதான நீரு தண்டா ஹரியானாவைச் சேர்ந்தவர். இந்த ஆண்டில் ஏற்கெனவே இத்தாலியின் லோனாட்டோவில் நடைபெற்ற ISSF ஷாட்கன் உலகக் கோப்பை போட்டியில் தனிநபர் டிராப் தங்கம் வென்று முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையையும் படைத்திருந்தார்.ஆசிய விளையாட்டில் நீரு தண்டாவின் இந்த வரலாற்றுத் தங்கம் இந்திய ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.