நீட் தேர்வு: ஹால்டிக்கெட் முதல் டிரெஸ் கோட் வரை - மாணவர்கள் கவனிக்க வேண்டிய 'செக் லிஸ்ட்' விபரங்கள்!
மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் மே மாதம் நடைபெறவுள்ள நிலையில், தேர்வு எழுதச் செல்லும் மாணவ, மாணவியர் கடைசி நேரப் பதற்றத்தைத் தவிர்க்கத் தேசிய தேர்வு முகமை வழங்கியுள்ள அறிவுறுத்தல்களை முறையாகப் பின்பற்றுவது அவசியமாகும்.
ஹால்டிக்கெட்டில் மாணவர், விண்ணப்பப் படிவத்தில் பதிவேற்றம் செய்த அதே புகைப்படத்தைத் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டின் (Admit Card) இரண்டு பக்கங்களிலும் ஒட்ட வேண்டும். இடது கை பெருவிரல் ரேகையை அதற்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் தெளிவாகப் பதிவு செய்ய வேண்டும். ஒட்டப்பட்ட புகைப்படத்தின் இடதுபுறத்தில் மாணவர்கள் கையொப்பமிட வேண்டும். மறந்துடாதீங்க.. தேர்வர் கையொப்பம் போடும் இடத்தில், தேர்வு அறையில் கண்காணிப்பாளர் முன்னிலையில் மட்டுமே கையெழுத்திட வேண்டும்.
மாணவர்கள் முறையாகப் புகைப்படம் ஒட்டப்பட்ட அட்மிட் கார்டு, ஆதார் கார்டு, பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை அல்லது பாஸ்போர்ட் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு அசல் அடையாள அட்டை, நீலம் அல்லது கருப்பு நிறத்திலான பால்பாயிண்ட் பேனா, ஒளி ஊடுருவக்கூடிய தண்ணீர் பாட்டில், வருகைப் பதிவேட்டில் ஒட்டுவதற்கு கூடுதலாக ஒரு பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகிய பொருட்களை மட்டுமே தேர்வு அறைக்குள் கொண்டு செல்ல அனுமதி உண்டு.
எலக்ட்ரானிக் கடிகாரங்கள், மொபைல் போன்கள், கால்குலேட்டர்கள், புளூடூத் கருவிகள், பென்சில் பாக்ஸ், பைகள் மற்றும் காகிதத் துண்டுகள் ஆகியவற்றைத் தேர்வு மையத்திற்குள் கொண்டு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஆபரணங்கள் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை அணிந்து செல்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தேர்வு தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவே மாணவர்கள் மையத்திற்குச் சென்றடைய வேண்டும். ஹால்டிக்கெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள 'ரிப்போர்ட்டிங் டைம்' (Reporting Time) முடிந்த பிறகு வருபவர்கள் எக்காரணம் கொண்டும் உள்ளே அனுமதிக்கப்பட மாட்டார்கள்.