நீட் 2026 தேர்வு  வினாத்தாள் வாட்ஸ்அப், டெலிகிராம் மூலம் கசிவு...  பிண்ணனியில் மாஃபியா கும்பல் முறைகேடு... சிபிஐ கிடுக்கிப்பிடி விசாரணை! 

 

 

நாடு முழுவதும் கடந்த மே 3-ம் தேதி நடைபெற்ற இளநிலை நீட் (NEET UG 2026) மருத்துவ நுழைவுத் தேர்வை ரத்து செய்வதாகத் தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. இந்தத் தேர்வின் வினாத்தாள்கள் முன்கூட்டியே கசிந்ததாக எழுந்த புகாரைத் தொடர்ந்து நடத்தப்பட்ட தீவிர விசாரணையில், இதன் பின்னணியில் ஒரு பெரிய தனியார் மாஃபியா கும்பல் செயல்பட்டது கண்டறியப்பட்டுள்ளது. இந்த முறைகேடு காரணமாக லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம் மற்றும் தேர்வின் நம்பகத்தன்மை பாதிக்கப்பட்டுள்ளதால், மறுதேர்வு நடத்த மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.

நாசிக்கிலிருந்து ஹரியானாவுக்கு அனுப்பப்பட்ட ஒரே ஒரு அச்சுப் பிரதியிலிருந்து, நாடு முழுவதும் தேர்வு வினாத்தாள்கள் கசிந்த அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. ஹரியானாவில் உருவாக்கப்பட்ட 10 பிரதிகள் கொண்ட 5 தொகுப்புகள், ஒரு மையப்புள்ளி வழியாக ஆந்திரா, காஷ்மீர், ராஜஸ்தான், தெலங்கானா மற்றும் ஹரியானா ஆகிய 5 மாநிலங்களுக்கு மின்னல் வேகத்தில் அனுப்பப்பட்டுள்ளன. உள்ளூர் பயிற்சி மையங்கள் மற்றும் ஆலோசனைக் குழுக்கள் வழியாக இந்தத் தகவல் கசிவு பரப்பப்பட்டதை உறுதி செய்துள்ள புலனாய்வு அமைப்புகள், தற்போது நாடு தழுவிய அளவில் ஒடுக்குமுறையைத் தீவிரப்படுத்தியுள்ளன.

தற்போது இந்த வழக்கில் சிபிஐ நேரடியாகத் தலையிட்டுள்ளதால் விசாரணை புதிய வேகமெடுத்துள்ளது. தேசிய தேர்வு முகமை (NTA) மற்றும் ராஜஸ்தான் சிறப்புப் படையினரிடமிருந்து முக்கிய ஆதாரங்களைத் திரட்டியுள்ள சிபிஐ அதிகாரிகள், விரைவில் புதிய வழக்கைப் பதிவு செய்ய உள்ளனர். குறியாக்கம் செய்யப்பட்ட செய்தியனுப்பும் செயலிகள் மற்றும் ரகசிய இணையக் குழுக்கள் மூலம் இவ்வளவு பெரிய மோசடி அரங்கேற்றப்பட்டது, தேசிய அளவில் தேர்வுப் பாதுகாப்பு குறித்த பெரும் கவலையை மீண்டும் ஒருமுறை பொதுமக்களிடையே எழுப்பியுள்ளது.