மருத்துவப் படிப்புகளுக்கான முதுகலை நீட் தேர்வு.. விண்ணப்பப் பதிவு தொடங்கியது!

 

நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் எம்.டி, எம்.எஸ் மற்றும் முதுகலை டிப்ளமோ போன்ற படிப்புகளில் சேருவதற்கான நீட் முதுகலை நுழைவுத் தேர்வு வரும் ஆகஸ்ட் 30 ஆம் தேதி நடைபெறும் என்று தேசிய தேர்வுகள் வாரியம் அறிவித்துள்ளது. தேசிய தேர்வுகள் வாரியம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, இந்தத் தேர்வுக்கான முழுமையான கால அட்டவணை விபரம் வெளியிடப்பட்டுள்ளது.

தேர்வு குறித்த முழுமையான விபரங்கள் அடங்கிய தகவல் கையேடு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான இணையவழி விண்ணப்பப் பதிவு நேற்று ஜூலை 1ம் தேதி மாலை 5 மணிக்குத் தொடங்கி, வரும் ஜூலை 21 ஆம் தேதி இரவு 11:55 மணி வரை நடைபெறவுள்ளது.

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கான தேர்வு நகரங்களை வரும் ஆகஸ்ட் 11 ஆம் தேதி அறிந்துக் கொள்ளலாம். கணினி வழியிலான இத்தேர்வு  ஆகஸ்ட் 30 ஆம் தேதி நடைபெற்று, அதற்கான முடிவுகள் செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்காகச் சில புதிய முக்கிய நெறிமுறைகளையும், பாதுகாப்பு எச்சரிக்கைகளையும் தேர்வுகள் வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

தேர்வுக்கான நகரங்களை ஒதுக்குவதில் இந்த முறை 'முதலில் வருபவருக்கு முன்னுரிமை' என்ற பழைய நடைமுறை பின்பற்றப்படாது. எனவே, அவசரமாக விண்ணப்பிக்க வேண்டிய அவசியமில்லை. மாணவர்கள் தங்களது விண்ணப்பப் படிவத்தில் குறிப்பிட்டுள்ள சொந்த மாநிலத்தின் அடிப்படையில் ஒரு நகரத்தையும், அதற்கு அருகிலுள்ள அண்டை மாநிலங்களில் இருந்து இரண்டு நகரங்களையும் முன்னுரிமை வரிசையில் தேர்வு செய்ய வேண்டும்.

விண்ணப்பத்தில் பதிவேற்றம் செய்யப்படும் புகைப்படம் 3 மாதங்களுக்குள் எடுக்கப்பட்டதாக இருக்க வேண்டும். தெளிவற்ற அல்லது எடிட் செய்யப்பட்ட புகைப்படங்கள் இருந்தால் விண்ணப்பங்கள் உடனடியாக நிராகரிக்கப்படும். விண்ணப்பதாரர்கள் இந்திய மருத்துவக் கவுன்சில் அல்லது மாநில மருத்துவக் கவுன்சிலில் பதிவு பெற்றிருக்க வேண்டும்.

மொத்தம் 200 பல்கேள்வி பதில்களைக் கொண்ட இத்தேர்வு 3 மணி நேரம் 30 நிமிடங்களுக்கு நடைபெறும். தவறான பதில்களுக்குப் பின்னடைவு மதிப்பெண் உண்டு என்பதால், மாணவர்கள் இப்போதிருந்தே தங்களுக்கான திருப்புதல் அட்டவணையைத் திட்டமிட்டுத் தயாராகுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.