நாளை முதல் 'நீட்' இலவச பயிற்சி முகாம்; மாணவர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

 

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு கடந்த மே 3-ஆம் தேதி நடைபெற்ற நிலையில், அதில் ஏற்பட்ட சில முறைகேடுகள் காரணமாக அந்தத் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, ரத்து செய்யப்பட்ட நீட் தேர்வு மீண்டும் வரும் ஜூன் 21, 2026 அன்று நடைபெறும் எனத் தேசிய தேர்வு முகமை அதிரடியாக அறிவித்துள்ளது. இந்த நிலையில், அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளி மாணவர்களின் மருத்துவக் கனவை நனவாக்கும் பொருட்டு, அவர்களுக்கு மீண்டும் நீட் தேர்வுக்கான குறுகிய காலச் சிறப்புப் பயிற்சி முகாம் நடத்தத் தமிழகப் பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

இது குறித்துப் பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும்  அனுப்பியுள்ள அவசரச் சுற்றறிக்கையில், இந்தச் சிறப்புப் பயிற்சி முகாம் நாளை மே 23 முதல் ஜூன் 20, 2026 வரை தொடர்ச்சியாக நடைபெறும் என்று தெரிவித்துள்ளார். வட்டார அளவில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 'வெற்றிப் பள்ளிகளில்' வைத்து இந்தப் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன.

ஒவ்வொரு பயிற்சி மையத்திற்கும் இயற்பியல், வேதியியல், உயிரியல் (தாவரவியல், விலங்கியல்) பாடங்களில் சிறந்த மற்றும் அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களைக் கொண்ட 'நிலையான ஆசிரியர் குழு'  அமைக்கப்பட வேண்டும்.

பயிற்சி முகாம் நடைபெறும் நாட்களில், சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்குப் பள்ளி திறந்த பிறகும் முகாம் முடியும் வரை மற்ற இதர பணிகளில் இருந்து முழுமையாக விலக்களிக்கப்படும். ஆசிரியர்கள் காலை 9 மணி முதல் மாலை 4:30 மணி வரை கட்டாயம் மையங்களில் இருந்து மாணவர்களின் சந்தேகங்களைத் தீர்த்து வைக்க வேண்டும்.

முகாமில் பங்கேற்கும் மாணவர்களுக்குத் தேவையான மதிய உணவு, காலை மற்றும் மாலை வேளைகளில் சத்துணவு/சிற்றுண்டி மற்றும் அடிப்படை வசதிகளை அந்தந்தப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் தடையின்றிக் கிடைக்கச் செய்ய வேண்டும்.

மாணவர்களுக்கான முக்கிய வழிகாட்டுதல்கள்:

பயிற்சி முகாமிற்கு வரும் மாணவர்கள் அனைவரும் கட்டாயம் தங்களின் பள்ளிச் சீருடை மற்றும் பள்ளி அடையாள அட்டை அணிந்து வர வேண்டும்.

மாணவர்கள் எவ்வித விடுப்புமின்றித் தொடர்ச்சியாக அனைத்து நாட்களிலும் வகுப்புகளில் பங்கேற்பதை அந்தந்தப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும்.

மாவட்ட அளவில் நீட் தேர்விற்கு விண்ணப்பித்துள்ள அரசுப் பள்ளி மாணவர்களின் விவரங்களைச் சேகரித்து, மாவட்டத் தலைமை ஆசிரியர் ஒருங்கிணைப்பாளரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

மறுதேர்வை எதிர்கொள்ளும் அரசுப் பள்ளி மாணவர்களுக்குப் பாடவாரியான பிரத்யேகப் பயிற்சிகள், மாதிரித் தேர்வுகள் மற்றும் கல்வியியல் நிபுணர்களின் நேரடி வழிகாட்டுதல்கள் இந்த முகாமில் வழங்கப்பட உள்ளதால், இது மாணவர்களிடையே பெரும் வரவேற்பையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.