நீட் வினாத்தாள் கசிவு.. கைதான இயற்பியல் ஆசிரியருக்கு 5 நாட்கள் சி.பி.ஐ. காவல்!
மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த வழக்கை விசாரித்து வரும் மத்தியப் புலனாய்வு அமைப்பு, முக்கியக் குற்றவாளிகளைக் காவலில் எடுத்து விசாரிக்கத் தொடங்கியுள்ளது. வினாத்தாள் கசிவு தொடர்பாக இதுவரை 13 பேரைச் சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்துள்ள நிலையில், கைதானவர்களில் முக்கிய நபர்களான ஒரு பள்ளி ஆசிரியர் மற்றும் மருத்துவரை ஜூன் 1-ம் தேதி வரை சி.பி.ஐ. காவலில் எடுத்து விசாரிக்க டெல்லி நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
இளநிலை மருத்துவப் படிப்புகளான எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்டவற்றில் சேருவதற்காக, தேசிய தேர்வு முகமை சார்பில் கடந்த மே 3ம் தேதி நாடு முழுவதும் நீட் தேர்வு நடத்தப்பட்டது. இந்தியாவிலுள்ள 552 நகரங்கள் மற்றும் வெளிநாடுகளில் 14 இடங்கள் என மொத்தம் 5,432 மையங்களில் நடைபெற்ற இத்தேர்வை சுமார் 22.80 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர்.
தேர்வு தொடங்குவதற்கு முன்பே பல்வேறு மாநிலங்களில் வினாத்தாள் கசிந்ததாக எழுந்த அடுக்கடுக்கான புகார்களைத் தொடர்ந்து, தார்மீகப் பொறுப்பேற்று நடந்து முடிந்த நீட் தேர்வை தேசிய தேர்வு முகமை ரத்து செய்தது. இந்த விவகாரத்தில் மாணவர்கள் மறுதேர்வுக்குப் புதிதாக விண்ணப்பிக்கவோ, கூடுதல் கட்டணம் செலுத்தவோ தேவையில்லை என்றும், ஏற்கனவே கட்டிய தேர்வுக் கட்டணம் மாணவர்களுக்கே திருப்பி வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து மத்தியக் கல்வி அமைச்சகத்தின் உயர்கல்வித் துறை அளித்த புகாரின் பேரில், சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து நாடு தழுவிய அளவில் தீவிர விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர். வினாத்தாள் கசிவின் பின்னணியில் உள்ள இடைத்தரகர்கள் மற்றும் முறைகேட்டாளர்களைக் கண்டறியும் நோக்கில் சி.பி.ஐ. தரப்பில் டெல்லி நீதிமன்றத்தில் அவசர மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
மனுவை விசாரித்த நீதிமன்றம், இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முக்கியக் குற்றவாளியான தேஜஸ் ஹர்ஷத்குமார் என்ற இயற்பியல் ஆசிரியரை 5 நாட்கள் சி.பி.ஐ. காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கியது. இவருடன் இணைந்து வினாத்தாள் விநியோகத்தில் தொடர்புடையதாகக் கைது செய்யப்பட்டுள்ள குழந்தைகள் நல மருத்துவர் மனோஜ் சின்ஷுரே என்பவரையும் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற உத்தரவின்படி, சி.பி.ஐ. காவலில் எடுத்துச் செல்லப்படும் இவர்கள் இருவரிடமும் வினாத்தாள் எங்கிருந்து கசிந்தது, இதன் பின்னணியில் உள்ள முக்கியப் புள்ளிகள் யார் மற்றும் எவ்வளவு பணப் பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளன என்பது குறித்துத் தீவிர விசாரணை நடத்தப்படவுள்ளது. காவல் முடிவடைந்ததும் வரும் ஜூன் 1ம் தேதி இவர்கள் இருவரையும் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.