நாடு முழுவதும் நீட் மறுதேர்வு நிறைவு - 5,440 மையங்களில் 22 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் எழுதினர்!

 

கடந்த மே மாதம் நடைபெற்ற தேர்வில் எழுந்த குளறுபடிகள் காரணமாக ரத்து செய்யப்பட்டு, தேசியத் தேர்வுகள் முகமையால்  மாற்றுத் தேதியாக அறிவிக்கப்பட்ட மருத்துவப் படிப்பிற்கான நீட் மறுதேர்வு இன்று நாடு முழுவதும் பலத்த பாதுகாப்புடன் இனிதே நிறைவடைந்தது.

நாடு முழுவதும் இன்று பிற்பகல் 2:00 மணிக்குத் தொடங்கிய இத்தேர்வு, மாலை 5:15 மணி வரை ஒரே ஷிப்ட்டாக, ஆஃப்லைன் முறையில் நடத்தப்பட்டது. முன்னதாக, மதியம் 1:30 மணிக்கே தேர்வு மையங்களின் நுழைவு வாயில்கள் அனைத்தும் முறைப்படி மூடப்பட்டன. இந்தியாவில் உள்ள 551 நகரங்கள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள 14 நகரங்கள் என மொத்தம் 5,440 தேர்வு மையங்களில் இத்தேர்வு நடைபெற்றது. நாடு முழுவதும் 22 லட்சத்திற்கும் அதிகமான மாணவ, மாணவிகள் இந்த மறுதேர்வை  எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் எழுதியுள்ளனர்.

முறைகேடுகளை முற்றிலும் தவிர்க்கும் பொருட்டு, சுமார் 1.38 லட்சம் சிசிடிவி கேமராக்கள், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பக் கண்காணிப்பு மற்றும் பயோமெட்ரிக் சோதனைகள் அனைத்து மையங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தீவிரமாகப் பயன்படுத்தப்பட்டன. மறுதேர்வுக்கான ஏற்பாடுகள் தமிழகத்திலும் மிக விரிவான முறையில் போர்க்கால அடிப்படையில் செய்யப்பட்டிருந்தன:

தமிழகத்தைப் பொறுத்தமட்டில் சென்னை, திருச்சி, கோவை, மதுரை, சேலம் உட்படப் பல்வேறு மாவட்டங்களில் மொத்தம் 307 பிரத்யேகத் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த மையங்களில் மட்டும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் எவ்விதத் தொய்வுமின்றி தங்களது நீட் மறுதேர்வை எழுதி முடித்துள்ளனர்.

தேர்வு முடிவடைந்ததைத் தொடர்ந்து, இயற்பியல் பகுதி சற்று கடினமாகவும், வேதியியல்  மற்றும் தாவரவியல், விலங்கியல் உள்ளிட்ட உயிரியல்  பகுதிகள் ஓரளவுக்கு எளிமையாகவும் இருந்ததாகத் தேர்வு எழுதிவிட்டு வெளியே வந்த மாணவர்கள் தங்களது முதற்கட்டக் கருத்துகளைத் தெரிவித்துள்ளனர்.