நீட் மறுதேர்வு குளறுபடி.. நாக்பூர் மாணவருக்கு அபுதாபியில் தேர்வு மையம் - ஹால் டிக்கெட்டைப் பார்த்து அதிர்ந்த பெற்றோர்!
நாடு முழுவதும் நாளை நீட் மறுதேர்வு நடைபெறவுள்ள சூழலில், தேசியத் தேர்வு முகமையின் ஹால் டிக்கெட் குளறுபடியால் மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவருக்கு அபுதாபியில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்ட வினோதச் சமபவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஏற்கனவே நீட் தேர்வு முறைகேடுகள் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த புதிய குளறுபடி மாணவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் நாக்பூர் பகுதியைச் சேர்ந்த மாணவர் ஒருவர், நாளை நடைபெறவிருந்த நீட் மறுதேர்வுக்கு விண்ணப்பித்திருந்தார். இதற்கான அனுமதிச் சீட்டு இணையதளத்தில் வெளியானதைத் தொடர்ந்து, அதனை அவர் பதிவிறக்கம் செய்து பார்த்துள்ளார். அப்போது, நாக்பூரிலேயே தேர்வு மையம் ஒதுக்கப்பட்டிருக்க வேண்டிய அந்த மாணவருக்கு, இந்தியாவின் எல்லையைக் கடந்து ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரான அபுதாபியில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதனைப் பார்த்து அந்த மாணவனும், அவரது பெற்றோரும் செய்வதறியாது அதிர்ச்சியில் உறைந்தனர். ஒரே நாளில் அபுதாபிக்குச் சென்று தேர்வு எழுதுவது சாத்தியமற்ற ஒன்று என்பதால், அவர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகினர்.
இந்தத் தொழில்நுட்பக் குளறுபடி குறித்து பாதிக்கப்பட்ட மாணவரின் பெற்றோர், உடனடியாகத் தேசியத் தேர்வு முகமையின் உயர் அதிகாரிகளுக்கும், சம்பந்தப்பட்ட கட்டுப்பாட்டு அறைக்கும் அவசரப் புகாரை அனுப்பினர்.
விவகாரம் பூதாகரமானதை அடுத்து, ஹால் டிக்கெட் தயாரிப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பத் தவறு காரணமாகவே வெளிநாட்டு மையம் காட்டியதாக அதிகாரிகள் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட மாணவரின் விபரங்கள் உடனடியாகச் சரிபார்க்கப்பட்டு, அவருக்கு நாக்பூர் அல்லது அதன் அருகாமையிலேயே புதிய தேர்வு மையத்துடன் கூடிய மாற்று அனுமதிச் சீட்டு விரைவில் மின்னஞ்சல் மூலம் வழங்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.