நாளை மறுதினம் நீட் மறுதேர்வு - புதிய ஹால் டிக்கெட் கட்டாயம்.. என்னென்ன தேவை.. முழு செக் லிஸ்ட்!

 

மருத்துவப் படிப்புகளுக்கான நீட் மறுதேர்வு வரும் ஜூன் 21ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவிருக்கும் நிலையில், தேசிய தேர்வு முகமை தேர்வர்களுக்கான மிக முக்கிய அவசர அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த மே 3ஆம் தேதி நடைபெற்ற முதன்மைத் தேர்வின் போது வழங்கப்பட்ட பழைய ஹால் டிக்கெட்டுகளைக் கொண்டு இந்த மறுதேர்வை எழுத முடியாது என்று திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுதேர்வு எழுதும் மாணவர்களின் கோரிக்கைகள் மற்றும் விருப்பங்களின் அடிப்படையில், பலருக்குத் தற்பொழுது புதிய தேர்வு மையங்கள் மாற்றி ஒதுக்கப்பட்டுள்ளன. எனவே, பழைய ஹால் டிக்கெட்டில் உள்ள தேர்வு மைய விவரங்கள் மாற வாய்ப்புள்ளதால், தேர்வர்கள் அனைவரும் கட்டாயமாகப் புதிய ஹால் டிக்கெட்டைப் பதிவிறக்கம் செய்து, அதையே தேர்வு மையத்திற்கு எடுத்து வர வேண்டும் என NTA அறிவுறுத்தியுள்ளது.

தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பில் ஒரு முக்கியத் தெளிவுபடுத்தலையும் வழங்கியுள்ளது. ஏற்கனவே அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து புதிய மறுதேர்வுக்கான ஹால் டிக்கெட்டைப் பதிவிறக்கம் செய்து கையில் வைத்திருப்பவர்கள், அதனை மீண்டும் பதிவிறக்கம் செய்ய வேண்டிய அவசியமில்லை.

இன்னும் புதிய ஹால் டிக்கெட்டை எடுக்காதவர்கள் உடனடியாக NTA-வின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்திற்குச் சென்று, தங்களின் விபரங்களைப் பதிவிட்டுப் புதிய ஹால் டிக்கெட்டைப் பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். பழைய ஹால் டிக்கெட்டுடன் வரும் மாணவர்கள் எக்காரணம் கொண்டும் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.