நாளை நீட் மறுதேர்வு.. மாணவர்களுக்கான மன அழுத்தத்தைப் போக்க உதவி எண்கள் அறிவிப்பு!
வினாத்தாள் கசிவு புகார்களால் ரத்து செய்யப்பட்டு, நாளை ஜூன் 21, ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் நீட் மறுதேர்வு நடைபெறவுள்ள சூழலில், தேர்வு எழுதும் மாணவ, மாணவிகள் மற்றும் அவர்தம் பெற்றோர்களின் மன அழுத்தத்தைப் போக்கும் வகையில் தமிழ்நாடு அரசு இலவச தொலைபேசி உதவி எண்களை அறிவித்துள்ளது.
இது குறித்துத் தமிழ்நாடு அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசுச் செயலாளர் டாக்டர் தாரேஸ் அகமது வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 2026-27 ஆம் கல்வியாண்டு மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் மறுதேர்வு நாளை நடைபெறுகிறது. திடீரென அறிவிக்கப்பட்ட இந்த மறுதேர்வால் மாணவர்கள் எதிர்கொள்ளும் மன உளைச்சல், பயம் ஆகியவற்றைப் போக்கி, அவர்களின் மன உறுதியையும் மனநலத்தையும் காக்கத் தமிழ்நாடு அரசு தீவிர நடவடிக்கை எடுத்துள்ளது.
மாநில அரசின் "நட்புடன் உங்களோடு" மனநல ஆதரவுத் திட்டத்தின் கீழ், தொலைபேசி வழியாகத் தொடர்ச்சியான ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகின்றன. தேர்வு குறித்த அச்சம் அல்லது பதற்றம் உள்ள மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர் எவ்விதத் தயக்கமுமின்றி இலவச உதவி எண்கள்: 14416 அல்லது 104 தொடர்பு கொள்ளலாம்.
இந்த எண்களைத் தொடர்பு கொள்ளும் போது, மறுமுனையில் இருக்கும் அதிநவீனப் பயிற்சி பெற்ற அரசு மனநல ஆலோசகர்கள் மற்றும் மனநல மருத்துவர்கள் தகுந்த ஆலோசனைகளையும், தன்னம்பிக்கை ஊட்டும் வழிகாட்டுதல்களையும் உடனுக்குடன் வழங்குவர்.
நாளை தமிழகத்தில் மட்டும் 1.42 லட்சம் மாணவர்கள் இந்த மறுதேர்வை எழுதவுள்ள நிலையில், இன்று நள்ளிரவு மற்றும் நாளை தேர்வு தொடங்கும் முன் ஏற்படும் கடைசி நிமிடப் பதற்றத்தைத் தணிக்க இந்தத் தொலைபேசிச் சேவை 24 மணி நேரமும் தடையின்றி இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, மதிப்பெண் சவால்கள் மற்றும் தேர்வு அழுத்தங்கள் குறித்து மாணவர்கள் யாரும் தேவையற்ற அச்சங்களுக்கு ஆளாகாமல், அரசின் இந்த இலவச சேவையைப் பயன்படுத்தித் தெளிவான மனநிலையோடு நாளை தேர்வை எதிர்கொள்ளுமாறு மக்கள் நல்வாழ்வுத்துறை கேட்டுக் கொண்டுள்ளது.