நீட் தேர்வுக்கு படித்து வந்த மாணவி விஷம் குடித்துத் தற்கொலை - தொடரும் துயரம்!
ராஜஸ்தான் மாநிலம் கோட்டா பகுதியில் நீட் தேர்விற்குத் தயாராகி வந்த மாணவி ஒருவர், விஷம் குடித்துத் தற்கொலை செய்துகொண்ட செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் 'கோச்சிங் ஹப்' என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்கள் ஒரு தொடர்கதையாகி வருகிறது. அந்த வகையில், மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த 18 வயது மாணவி ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார்.
தற்கொலை செய்துகொண்ட மாணவி ஜுகி பட்டேல் (18), மத்தியப் பிரதேச மாநிலம் சட்டர்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். கோட்டாவில் உள்ள வசந்த் விஹார் பகுதியில் தங்கி, அங்குள்ள தனியார் பயிற்சி மையம் ஒன்றில் இளநிலை நீட் தேர்விற்காகத் தயாராகி வந்தார்.
தனது விடுதி அறையில் அவர் திடீரென விஷம் அருந்தியுள்ளார். இதையறிந்த சக மாணவிகள் மற்றும் அக்கம் பக்கத்தினர், உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள புதிய மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜுகி பட்டேலுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
தகவலறிந்து வந்த தாதாபாரி காவல் நிலையப் போலீசார், மாணவியின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். முதற்கட்ட விசாரணையில், கடுமையான தேர்வு அழுத்தமேமாணவியின் இந்த முடிவுக்குக் காரணமாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. சம்பவ இடத்தில் தற்கொலைக் குறிப்பு ஏதேனும் சிக்கியதா என்பது குறித்துப் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த சில ஆண்டுகளில் மட்டும் கோட்டாவில் பல மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இதனால், பயிற்சி மையங்களில் மாணவர்களுக்குக் கவுன்சிலிங் வழங்கப்பட வேண்டும் என்றும், தங்கும் விடுதிகளில் உள்ள மின்விசிறிகளில் 'ஆன்டி-சூசைடு' ஸ்பிரிங் கருவிகளைப் பொருத்த வேண்டும் என்றும் மாவட்ட நிர்வாகம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆயினும், மாணவர்களின் மன அழுத்தத்தைக் குறைப்பதற்கான நிரந்தரத் தீர்வு இன்னும் எட்டப்படவில்லை என்பதே கசப்பான உண்மையாகும்.