நீட் தேர்வு 2026... இன்று வெளியாகிறது ஹால் டிக்கெட் !
மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு மே 3ம் தேதி நாடு முழுவதும் நடைபெற உள்ளது. இதற்கான ஹால் டிக்கெட்டுகளை தேசிய தேர்வு முகமை (NTA) இன்று ஏப்ரல் 26ம் தேதி வெளியிடுகிறது. ஏற்கனவே தேர்வு எழுதவுள்ள நகரம் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்ட நிலையில், தற்போது தேர்வு மையத்தின் முழு முகவரியுடன் கூடிய ஹால் டிக்கெட் வெளியாகிறது.
மாணவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான neet.nta.nic.in என்ற முகவரிக்குச் சென்று, தங்களது விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியைப் பதிப்போட்டு ஹால் டிக்கெட்டைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதனைப் பதிவிறக்கம் செய்தவுடன் அதில் உள்ள பெயர், புகைப்படம், தேர்வு மையம் மற்றும் தேர்வு நேரத்தைக் கவனமாகச் சரிபார்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏதேனும் பிழைகள் இருந்தால் உடனடியாகத் தேர்வு முகமையைத் தொடர்பு கொள்ள வேண்டும்.
நீட் தேர்வு மே 3-ந்தேதி மதியம் 2:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை பேனா மற்றும் தாள் (Offline) முறையில் நடைபெற உள்ளது. மாணவர்கள் காலை 11:00 மணிக்கே தேர்வு மையத்திற்கு வர வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். ஹால் டிக்கெட்டுடன் ஆதார் அட்டை போன்ற ஏதேனும் ஒரு அசல் அடையாளச் சான்றிதழைக் கொண்டு வருவது கட்டாயமாகும். டிஜிட்டல் ஹால் டிக்கெட்டுகள் அனுமதிக்கப்பட மாட்டாது என்பதால், 3 அல்லது 4 நகல்களை முன்கூட்டியே எடுத்து வைத்துக் கொள்வது நல்லது.