நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்க... மத்திய அரசுக்கு முதலமைச்சர் விஜய் வலியுறுத்தல்!

 

தேசிய தேர்வு முகமை நடத்திய நீட் நுழைவுத்தேர்வில் வினாத்தாள் கசிந்ததாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, அந்தத் தேர்வை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. இந்தச் சம்பவம் நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான மருத்துவ மாணவர்களின் நம்பிக்கையைச் சிதைத்துள்ளது. நீட் தேர்வின் நம்பகத்தன்மை மீண்டும் மீண்டும் பாதிக்கப்படுவதைச் சுட்டிக்காட்டியுள்ள முதலமைச்சர் விஜய், இந்தத் தேர்வு முறையின் குறைபாடுகளுக்கு இதுவே சான்று என்று கூறியுள்ளார்.

நீட் தேர்வு அறிமுகம் செய்யப்பட்ட காலத்திலிருந்தே, தமிழக அரசு அதனைத் தொடர்ந்து எதிர்த்து வருகிறது. இந்தத் தேர்வினால் கிராமப்புறம், அரசுப் பள்ளி மற்றும் சமூகப் பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவதாக அவர் கவலை தெரிவித்துள்ளார். எனவே, தமிழகத்தின் நீண்டகால கோரிக்கையான நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும் என்று அவர் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மற்றும் ஆயூஷ் மருத்துவப் படிப்புகளில், மாநில ஒதுக்கீட்டின் கீழ் உள்ள அனைத்து இடங்களையும் பிளஸ் 2 மதிப்பெண்களின் அடிப்படையில் அந்தந்த மாநிலங்களே நிரப்ப அனுமதிக்க வேண்டும் என்று முதலமைச்சர் விஜய் கேட்டுக்கொண்டுள்ளார். வினாத்தாள் கசிவு போன்ற நிகழ்வுகள் மீண்டும் நடக்காமல் இருக்கவும், மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்கவும் இத்தகைய மாற்றங்கள் அவசியம் என்று அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.