நீட் தேர்வு கட்டணத்தை திரும்பப் பெற விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!
கடந்த மே 3 ம் தேதி நடைபெற்ற நீட் தேர்வில் வினாத்தாள் கசிந்ததாக எழுந்த புகார்களைத் தொடர்ந்து, அந்தத் தேர்வு முழுமையாக ரத்து செய்யப்பட்டு, 20 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு ஜூன் 21 அன்று தேசிய தேர்வு முகமை சார்பில் மறு தேர்வு நடத்தப்பட்டது. இந்நிலையில், தேர்வர்கள் தங்களின் தேர்வு கட்டணத் தொகையைத் திரும்பப் பெறுவதற்கான புதிய அறிவிப்பைத் தேசிய தேர்வு முகமை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் இதுவரை 8,29,510 தேர்வர்கள் மட்டுமே தங்களின் வங்கி கணக்கு விவரங்களை இணையதளத்தில் திருத்தம் அல்லது புதுப்பித்தல் செய்துள்ளனர்.
தகுதியுடைய பெரும் எண்ணிக்கையிலான மாணவர்கள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் தங்களின் விவரங்களைப் புதுப்பிக்காவிட்டால், கட்டணத் தொகையைத் திரும்பப் பெறும் வாய்ப்பை முழுமையாக இழக்க நேரிடும் என எச்சரிக்கை விடுக்ககப்பட்டுள்ளது. நீட் 2026 கட்டணத் திரும்பப் பெறுதலுக்கான வங்கி விவரங்களை இணையதளத்தில் புதுப்பிப்பதற்குக் ஜூலை 7 ம் தேதியான இன்றே இறுதி நாளாகும். இதுவரை இந்த நடைமுறையை முடிக்காத தேர்வர்கள் அனைவரும் இன்று இரவு 11:50 மணிக்குள் தங்களின் விவரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என அதிகாரிகள் விவரித்துள்ளனர்.
இன்று நள்ளிரவு அவகாசத்திற்குள் neet.nta.nic.in என்ற இணையதளத்தில் லாகின் செய்து விவரங்களைச் சரியாகப் புதுப்பிப்பவர்கள் மட்டுமே அடுத்தகட்ட கட்டணத் திரும்பப் பெறும் சுழற்சியில் சேர்க்கப்படுவார்கள். இந்த இறுதி வாய்ப்பைத் தவறவிடும் தேர்வர்கள், தங்களின் கட்டணத் தொகையைப் பெறுவதில் கடுமையான தாமதத்தைச் சந்திக்க நேரிடலாம் அல்லது தொகையை முழுமையாக இழக்க நேரிடும் என்றும் தேசிய தேர்வு முகமை தெளிவாகத் தெரிவித்துள்ளது. எனவே, மாணவர்கள் காலதாமதம் செய்யாமல் தங்களின் வங்கி விவரங்களை இன்றே விரைந்து சமர்ப்பிக்கும்படி வேண்டுகோள் விடுத்துள்ளது.