தொடரும் சோகம்...  நீட் முதற்கட்ட கவுன்சிலிங்கில் பெயர் வரல... மாணவி தூக்கிட்டு தற்கொலை! 

 

 

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை அன்பு நகர், சித்தார்த்தர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஐடி நிறுவன ஊழியர் ஹரிகிருஷ்ணன். இவருக்கு மனைவியும், இரண்டு மகள்களும் உள்ளனர்.ஹரிகிருஷ்ணனின் மூத்த மகளான ஸ்ருதிலயா (வயது 21), கடந்த 2023-ஆம் ஆண்டு ஒரு தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்புப் பயின்று முடித்துள்ளார். பின்னர், நீட் பயிற்சி முகாமுக்குச் சென்று நீட் தேர்வுக்குத் தயாராகி வந்துள்ள இவர், கடந்த ஆண்டும் தேர்வு எழுதிய போதிலும் மருத்துவப் படிப்பில் இடம் கிடைக்கவில்லை. இதனால் நடப்பு ஆண்டில் எப்படியாவது தேர்ச்சி அடைய வேண்டும் என்ற உறுதியுடன் முழு முயற்சியுடன் படித்து வந்துள்ளார்.

நடப்பு ஆண்டில் அவர் நீட் தேர்வில் வெற்றிபெற்ற நிலையில், தற்போது மருத்துவ படிப்புக்கான முதற்கட்ட கவுன்சிலிங் நடந்து வருகிறது. தேர்வான நபர்களின் பட்டியலும் வெளியான நிலையில், அதில் ஸ்ருதிலயாவின் பெயர் இடம்பெறவில்லை. இதனால் மனமுடைந்த ஸ்ருதிலயா கவலையில் இருந்து வந்துள்ளார்.

இதனிடையே, வருத்தத்துடன் நேற்று முன்தினம் இரவு உறங்கச் சென்றவர், காலை நேரத்தில் அறையில் இருந்து வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த பெற்றோர் மகளைத் தேடியபோது, அவர் வீட்டில் இருந்த ஷெட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாகத் தகவல் அறிந்த காவல்துறையினர், பெண்ணின் உடலை மீட்டுப் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்ததுடன், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.