வான்கடே மைதானத்தில் நெகிழ்ச்சி... 20,000 குட்டீஸ் ஐபிஎல் போட்டியை நேரில் காண நீதா அம்பானி செய்த ஏற்பாடு!
மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது. இப்போட்டியை நேரில் கண்டுகளிப்பதற்காக, மகாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநிலங்களின் பின்தங்கிய பகுதிகளைச் சேர்ந்த சுமார் 20,000 குழந்தைகளை ரிலையன்ஸ் ஃபவுண்டேஷன் தலைவரான நீதா அம்பானி நேரில் அழைத்து வந்துள்ளார். மைதானம் முழுவதும் குழந்தைகளுக்கே முன்னுரிமை அளிக்கப்பட்டு, அவர்கள் போட்டி முழுவதையும் மிகுந்த உற்சாகத்துடன் கண்டு ரசித்தனர்.
இந்த அரிய நிகழ்வில் தேசிய பார்வையற்றோர் சங்கத்தைச் சேர்ந்த 100 பார்வைக் குறைபாடு உள்ள குழந்தைகளும், 200க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி குழந்தைகளும் கலந்துகொண்டு போட்டியைத் தங்களது உணர்வுகளால் ரசித்தனர். இக்குழந்தைகள் அனைவரும் எவ்வித சிரமமுமின்றி போட்டியை ரசிப்பதற்காக மைதானத்தில் சிறப்பு வசதிகளும் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. விளையாட்டு என்பது அனைவருக்கும் பொதுவானது என்பதை நிரூபிக்கும் வகையில் அமைந்த இந்த நிகழ்வு, அங்கிருந்த கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியையும் பெரும் பாராட்டையும் பெற்றுள்ளது.