ஊழியர்களின் அலட்சியம்.. கணக்கீடு செய்வதில் குளறுபடி... எகிறிய மின் கட்டணத்தால் பொதுமக்கள் அதிர்ச்சி!
தமிழகத்தில் கோடை வெப்பத்தின் காரணமாகப் பொதுமக்கள் ஏசி, மின்விசிறிகளைத் தாராளமாகப் பயன்படுத்தி வரும் நிலையில், அவர்களின் தலையில் இடி விழுந்தது போல் மின் கட்டண வடிவில் பேரிடி வந்து சேர்ந்துள்ளது. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக ஊழியர்களின் அலட்சியம் மற்றும் மின் நுகர்வு கணக்கீடு செய்வதில் ஏற்பட்டுள்ள குளறுபடிகளே இதற்குக் காரணம் எனப் பொதுமக்கள் கொதித்தெழுந்துள்ளனர்.
தமிழகத்தில் தற்போதைய நடைமுறைப்படி, வீடுகளுக்கான மின் நுகர்வு என்பது 2 மாதங்களுக்கு ஒருமுறை (60 நாட்கள்) மின்வாரிய ஊழியர்களால் நேரில் வரப்பட்டு ரீடிங் எடுக்கப்பட்டு கணக்கிடப்பட வேண்டும். ஆனால், சென்னையின் பல்வேறு புறநகர்ப் பகுதிகளிலும் மற்றும் பல மாவட்டங்களிலும் மின்வாரிய ஊழியர்கள் தங்களது கடமையைச் சரிவரச் செய்யாமல், குறித்த காலக்கெடுவைத் தாண்டி மிகவும் தாமதமாகக் கணக்கெடுக்க வந்துள்ளதாகக் புகார்கள் எழுந்துள்ளன.
மின் ஊழியர்களின் இந்தத் தாமதமான வருகையால், மின் நுகர்வு நாட்கள் 60 நாட்களைத் தாண்டி அதிகரித்துள்ளது. இதன் விபரீத விளைவாக, வாடிக்கையாளர்களின் மின் பயன்பாட்டுப் பிரிவு அடுத்த உயர் நிலைக்குத் தானாகவே மாறிவிட்டது. அதாவது, குறைந்த கட்டணப் பிரிவில் வர வேண்டிய மின் யூனிட்டுகள், மின்வாரியத்தின் கணக்கீட்டுத் தாமதத்தால் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் அடுத்த ஸ்லாப் பிரிவுக்குச் சென்றுவிட்டன.
இந்த குளறுபடியால், நடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களது வழக்கமான மின் கட்டணத்தை விடக் கூடுதலாக 2,000 ரூபாய் முதல் 3,000 ரூபாய் வரை மின் கட்டணம் செலுத்த வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர். மின்வாரிய ஊழியர்களின் திட்டமிட்ட இந்த அலட்சியத்தால் தங்களது மாதாந்திர குடும்ப பட்ஜெட் முற்றிலும் சீர்குலைந்துள்ளதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்த விவகாரத்தில் தமிழக அரசு மற்றும் மின்சாரத் துறை உயர் அதிகாரிகள் உடனடியாகத் தலையிட்டு, பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்குக் கூடுதல் கட்டணத்தில் இருந்து விலக்கு அளிப்பதுடன், மின் கட்டணக் கணக்கீட்டு முறையைச் சீரமைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.