பேச்சுவார்த்தை தோல்வி... கச்சா எண்ணெய் 8.22% உயர்ந்தது - இந்தியாவில் தாக்கம் எப்படியிருக்கும்?!
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்ற அமெரிக்கா - ஈரான் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தை எவ்வித உடன்பாடும் இன்றித் தோல்வியில் முடிந்தது. இதன் எதிரொலியாகச் சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை இன்று வரலாறு காணாத வகையில் அதிரடியாக உயர்ந்துள்ளது.
கடந்த பிப்ரவரி 28-ல் தொடங்கிய போர் சூழலில், இன்று காலையில் சந்தை தொடங்கியதும் கச்சா எண்ணெய் விலை சுமார் 8% க்கும் மேல் எகிறியது. பிரென்ட் கச்சா எண்ணெய் ஒரு பேரலுக்கு 8.36% உயர்ந்து 103.16 டாலராக விற்பனையாகிறது. அமெரிக்காவின் கச்சா எண்ணெய் ஒரு பேரலுக்கு 8.22% உயர்ந்து 104.57 டாலராக உள்ளது.
பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததாக அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி. வேன்ஸ் அறிவித்ததைத் தொடர்ந்து, உலக எண்ணெய் விநியோகத்தின் உயிர்நாடியாகக் கருதப்படும் ஹார்முஸ் நீரிணையை ஈரான் முழுமையாக மூடியுள்ளது. தனது அணுசக்தி உரிமையை விட்டுக்கொடுக்க ஈரான் மறுத்துவிட்டதாலும், அமெரிக்கா தனது 'சிவப்பு கோடுகளை’ தளர்த்தாததாலும் இந்த முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது.
ஹார்முஸ் நீரிணையில் ஈரான் கப்பல்களுக்குக் கட்டணம் வசூலிப்பதையும், போக்குவரத்தைத் தடுப்பதையும் முறியடிக்க அமெரிக்கக் கடற்படை அங்கு முற்றுகையிடத் தயாராகி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 100 டாலரைத் தாண்டியுள்ளதால், இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்த வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது. இது ஏற்கனவே விலைவாசி உயர்வால் அவதிப்படும் சாமானிய மக்களுக்குக் கூடுதல் சுமையை ஏற்படுத்தும். மேலும், அத்தியாவசியப் பொருட்களின் போக்குவரத்துச் செலவு அதிகரிப்பதால் காய்கறிகள் முதல் மளிகைப் பொருட்கள் வரை அனைத்தும் விலை உயரக்கூடும்.