பட்டப்பகலில் பயங்கரம்... அண்ணன்-தம்பி இருவரும் கத்தியால் குத்திக் கொலை! 

 

 

நெல்லை டவுன் அருகே கார் நிறுத்துவது தொடர்பாக ஏற்பட்ட தகராறு கைகலப்பாக மாறியதில், அண்ணன்-தம்பி இருவரும் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் சென்னையில் வெல்டராக பணியாற்றி வரும் நபர் மீது போலீசாரின் கவனம் திரும்பியுள்ளது.நெல்லை டவுன் மணிப்புரம் பகுதியைச் சேர்ந்தவர் டால்டன் (76). இவரது சகோதரர் நிக்கோலஸ் ராஜரத்தினம் (78). இவர்கள் உள்பட சகோதரர்கள் நால்வரும் ஒரே வளாகத்தில் தனித்தனி வீடுகளில் வசித்து வருகின்றனர். டால்டன் அந்த பகுதியில் பெட்ரோல் நிலையம் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது.

டால்டனின் வீட்டின் அருகே செந்தில்குமார் (40) என்பவருக்கு சொந்தமான குடும்ப கோவில் உள்ளது. அந்த கோவில் அருகே காரை நிறுத்துவது தொடர்பாக டால்டனுக்கும், செந்தில்குமாருக்கும் இடையே ஏற்கனவே தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

செந்தில்குமார் சென்னையில் வெல்டராக வேலை செய்து வருகிறார். விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்த நிலையில், இன்று காலை மீண்டும் கார் நிறுத்துவது தொடர்பாக டால்டனின் மகன் நரேனுக்கும் செந்தில்குமாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த தகராறு கைகலப்பாக மாறியுள்ளது.

அப்போது நரேனின் பெரியப்பா நிக்கோலஸ் ராஜரத்தினம் தகராறை விலக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த செந்தில்குமார் கத்தியால் நிக்கோலஸ் ராஜரத்தினத்தை தாக்கியதாக போலீசார் தெரிவிக்கின்றனர். சத்தம் கேட்டு அங்கு வந்த டால்டனும் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதில் படுகாயமடைந்த டால்டனை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். நிக்கோலஸ் ராஜரத்தினம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த சம்பவத்தில் டால்டனின் மகன் நரேனும், செந்தில்குமாரும் காயமடைந்துள்ளனர். இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் சேகர் சஞ்சய் தேஷ்முக் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தினர். அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளையும் போலீசார் சேகரித்து வருகின்றனர்.கார் நிறுத்துவது தொடர்பான முன்விரோதமே இந்த சம்பவத்துக்கு காரணமா அல்லது வேறு ஏதேனும் பின்னணி உள்ளதா என்பது குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.