சாலையில் சண்டையிட்ட மாடுகள்… நெல்லையில் கர்ப்பிணி, குழந்தை உட்பட 3 பேர் காயம்!
திருநெல்வேலி மேலப்பாளையத்தில் சாலையில் ஆக்ரோஷமாக சண்டையிட்டுக் கொண்டிருந்த மாடுகள், இருசக்கர வாகனத்தில் சென்ற குடும்பத்தினர் மீது மோதியதில் கர்ப்பிணிப் பெண், குழந்தை உட்பட 3 பேர் காயமடைந்தனர். இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட மேலப்பாளையம் அம்பை சாலையில் ஏராளமான கால்நடைகள் சுற்றித் திரிகின்றன. இந்நிலையில், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பகல் நேரத்தில் சாலையில் 2 மாடுகள் ஒன்றுடன் ஒன்று ஆக்ரோஷமாக முட்டி மோதிக் கொண்டிருந்தன.
அப்போது, அந்த வழியாக தம்பதியினர் தங்களது குழந்தையுடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். திடீரென சண்டையிட்டுக் கொண்டிருந்த மாடுகள் ஓடிவந்து அவர்களது வாகனத்தின் மீது மோதின. இதில் நிலைதடுமாறிய 3 பேரும் சாலையில் தூக்கி வீசப்பட்டனர்.
இந்த விபத்தில் பின்னால் அமர்ந்திருந்த கர்ப்பிணிப் பெண்ணுக்கும் குழந்தைக்கும் சிறு காயங்கள் ஏற்பட்டன. உடனடியாக அங்கிருந்த பொதுமக்கள் விரைந்து சென்று 3 பேரையும் மீட்டனர். அதிர்ஷ்டவசமாக பெரிய அளவிலான பாதிப்புகள் ஏற்படவில்லை.
இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. சாலைகளில் கால்நடைகளைத் திரியவிடும் உரிமையாளர்கள் மீது மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக உள்ள மாடுகளைப் பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.