பட்டப்பகலில் பயங்கரம்... பேருந்து நிலையத்தில் மனைவி சராமாரி வெட்டிக்கொலை செய்த கணவன்..!  

 

திருநெல்வேலி மாவட்டத்தில்   பெரியார் பேருந்து நிலையத்தில் இன்று பயணிகள் கூட்டம் அதிகளவில் இருந்தது. அப்போது அங்கு நின்றுகொண்டிருந்த பேச்சியம்மாள் என்ற இளம்பெண்ணை, திடீரென அங்கு வந்த இளைஞர் ஒருவர் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக வெட்டத் தொடங்கினார்.

எதிர்பாராத இந்தத் தாக்குதலில் நிலைகுலைந்த பேச்சியம்மாள், ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.பட்டப்பகலில், பொதுமக்கள் முன்னிலையில் நடந்த இந்தத் துணிகரக் கொலையால் பயணிகள் அலறியடித்துக் கொண்டு ஓடினர்.கொலை செய்த வேகத்தில், அந்த இளைஞர் கையில் அரிவாளுடன் நேராக அருகில் உள்ள நெல்லை சந்திப்பு காவல் நிலையத்திற்குச் சென்று சரணடைந்தார்.போலீஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், சரணடைந்தவர் பேச்சியம்மாளின் கணவர் சுதாகர் என்பது தெரியவந்தது.

குடும்பப் பிரச்சினை காரணமாக இவர்களுக்குள் கடந்த சில மாதங்களாகவே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த சுதாகர், தனது மனைவியைப் பின்தொடர்ந்து வந்து திட்டமிட்டு இந்தப் படுகொலையைச் செய்துள்ளார்.சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்த போலீஸார், பேச்சியம்மாளின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தற்போது சுதாகரை முறைப்படி கைது செய்துள்ள போலீஸார், கொலையின் பின்னணியில் வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளனவா? என்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.அசம்பாவிதங்களைத் தவிர்க்கப் பேருந்து நிலையப் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், இதுபோன்ற வன்முறைச் சம்பவம் நெல்லையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.