இரட்டை கொலை வழக்கில் தப்பியோடிய மற்றொரு குற்றவாளிக்கு கை முறிவு!
நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் அருகே உள்ள மூலச்சி கிராமத்தைச் சேர்ந்த 40 வயதுடைய காளிமுத்து என்பவர், கடந்த 2 ஆம் தேதி தனது மகன்களுடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது மாதுடையார்குளம் பகுதியில் காரில் பின்தொடர்ந்து வந்த மர்ம கும்பல், காளிமுத்துவின் வாகனத்தின் மீது பலமாக மோதியுள்ளது. இந்த விபத்தில் அவரது 5 வயது மகன் ஜெயராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், காளிமுத்துவின் தலையைத் துண்டித்து அந்தக் கொடூர கும்பல் கொலை செய்து தப்பியோடியது.
இந்த பயங்கர இரட்டை கொலை சம்பவம் குறித்து வீரவநல்லூர் போலீசார் தீவிரமாக வழக்குப் பதிவு செய்து தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்தனர். முதற்கட்டமாக மகேஷ், கொக்கி குமார், முத்துச்செல்வன் ஆகிய 3 பேரையும், அதனைத் தொடர்ந்து மணிகண்டன், ராஜதுரை, பட்டு ராஜா, மகாலிங்கம் ஆகிய 4 பேரையும் போலீசார் அடுத்தடுத்து அதிரடியாகக் கைது செய்தனர். மேலும் இந்த கொடூர குற்றத்தில் தொடர்புடைய மற்ற நபர்களைப் போலீசார் தீவிரமாகத் தேடி வந்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய மூலச்சி பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய கிருஷ்ணன் என்பவரைப் போலீசார் வளைத்துப் பிடித்தனர். போலீசாரைக் கண்டதும் தப்பியோட முயன்ற கிருஷ்ணன், எதிர்பாராத விதமாகக் கீழே தவறி விழுந்ததில் அவரது கையில் பலத்த எலும்பு முறிவு ஏற்பட்டது. இதையடுத்து அவனைக் கைது செய்த போலீசார், சிகிச்சைக்காகத் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பலத்த காவலுடன் அனுமதித்துள்ளனர். இந்த கொடூர வழக்கில் இதுவரை மொத்தம் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள நபர்களும் விரைவில் பிடிபடுவார்கள் என போலீசார் உறுதியளித்துள்ளனர்.