அரிய நரம்பு நோயை வென்று மருத்துவப் பணிக்குத் திரும்பிய இளம் மருத்துவர்… 32 வயதில் திடீர் மரணம்!

 

 

ஆந்திர மாநிலம் நெல்லூரைச் சேர்ந்த பிரபல நரம்பியல் நிபுணர் டாக்டர் குங்கலா லாவண்யா (32) திடீரென உயிரிழந்த சம்பவம் மருத்துவத் துறையிலும் பொதுமக்களிடையேயும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

எனெல் மருத்துவமனையின் இயக்குநராகப் பணியாற்றிய லாவண்யா, அந்த மருத்துவமனையின் தலைவர் டாக்டர் தசரத நாகேந்திர பிரசாத் – லட்சுமி தம்பதியின் மகள் ஆவார். நரம்பியல் துறையில் உயர்கல்வி முடித்து தங்கப் பதக்கமும் பெற்றவர். குறைந்த கட்டணத்தில் சிகிச்சை அளித்ததுடன், ஏழை மக்களுக்காக இலவச மருத்துவ முகாம்களையும் நடத்தி வந்தார்.

அரிய நோயை வென்று சேவைக்குத் திரும்பியவர்

கடந்த 2025-ஆம் ஆண்டு லாவண்யாவுக்கு 'மயஸ்தீனியா கிராவிஸ்' என்ற அரிய வகை தன்னுடல் தாக்கு நரம்பியல் நோய் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் பேசவும், நிற்கவும் சிரமப்பட்ட அவர், சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சைக்குப் பிறகு உடல்நலம் தேறினார். மருத்துவர்கள் ஓய்வெடுக்க அறிவுறுத்தியபோதும், நான்கு மாதங்களிலேயே மீண்டும் பணிக்குத் திரும்பி கிராமப்புற மக்களுக்கு இலவச நரம்பியல் சிகிச்சை வழங்கினார்.

இந்நிலையில், கடந்த நவம்பர் 7-ஆம் தேதி அவர் உயிரிழந்ததாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. அவரது மறைவு நெல்லூர் மருத்துவ வட்டாரத்தினரையும், அவரிடம் சிகிச்சை பெற்றவர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.