வாட்டர் டேங்க் தண்ணீரில் மின்கசிவு! நெல்லூரில் 11, 7 வயது சகோதரிகள் பலி!
ஆந்திரப் பிரதேச மாநிலம் நெல்லூரில் வீட்டில் தேங்கியிருந்த தண்ணீரில் மின்கசிவு ஏற்பட்டதில் 11 மற்றும் 7 வயதுடைய இரண்டு சகோதரிகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.நெல்லூர் மாவட்டம் ஹரிநாதபுரத்தில் உள்ள ஒரு வீட்டில் வாட்டர் டேங்க் நிரம்பி தண்ணீர் வெளியேறியதாக கூறப்படுகிறது. இதனால் வீட்டின் தரைப்பகுதியில் தண்ணீர் தேங்கியுள்ளது. அந்த நேரத்தில் வீட்டின் மெயின் மின் இணைப்பு துண்டிக்கப்படாமல் இருந்ததாகவும், இதனால் தேங்கிய தண்ணீரில் மின்கசிவு ஏற்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அப்போது வீட்டில் இருந்த 11 வயது ஜோதி உரிலகண்டி மற்றும் அவரது 7 வயது சகோதரி அமுல்யா ஆகியோர் தேங்கியிருந்த தண்ணீரில் சிக்கியுள்ளனர். எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் மீட்புக் குழுவினர் மற்றும் அதிகாரிகள் அங்கு விரைந்து சென்றனர். உயிரிழந்த சிறுமிகளின் உடல்கள் மீட்கப்பட்டு, நெல்லூர் ஜிஜி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டன.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சிறுமிகள் உயிரிழந்த சம்பவம் ஹரிநாதபுரம் பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வீட்டில் தண்ணீர் தேங்கியிருக்கும் நேரங்களில் மின் இணைப்புகளை உடனடியாக துண்டித்து, பாதுகாப்பான முறையில் மின்சாரக் கசிவு உள்ளதா என்பதை சரிபார்க்க வேண்டியதன் அவசியத்தையும் இந்த சம்பவம் உணர்த்தியுள்ளது.