நேபாளப் பேரிடர்: 275 இந்தியர்களை இன்னும் காணவில்லை - மத்திய அரசு தகவல்!

 

நேபாளத்தில் சமீபத்தில் ஏற்பட்ட பேரிடரில் சிக்கியவர்களில் இன்னும் 275 இந்தியர்களைப் பற்றிய எந்தவிதமான தகவலும் கிடைக்கவில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நேபாளத்தில் கடந்த ஆகஸ்ட் 26 ஆம் தேதி ஏற்பட்ட கடுமையான பேரிடரில் சிக்கிய ஏராளமான இந்தியர்களில், இன்னும் 275 பேரைப் பற்றிய எந்தத் தகவலும் கிடைக்கவில்லை என்றும் அவர்களைத் தேடும் பணியில் நேபாள அரசுடன் இணைந்து தீவிரமாகச் செயல்பட்டு வருவதாகவும் மத்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்தார்.

இந்தச் பேரிடர் சம்பவத்தைத் தொடர்ந்து இதுவரை 166 இந்தியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். சீனப் பகுதிகளில் சிக்கியிருந்த 1,907 இந்தியர்கள் பாதுகாப்பாக நேபாளத்திற்குள் வந்துவிட்டதாகவும், தற்போதைய நிலவரப்படி திபெத் பகுதியில் இந்தியர்கள் யாரும் சிக்கியிருக்கவில்லை என்று சீன அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறினார்.

நேபாளத்தில் இந்தியா சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்புப் பணிகள் மற்றும் அந்த நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்ட நிவாரண உதவிகள் குறித்த விவரங்களையும் மத்திய அரசு வெளியிட்டுள்ளது.