நேபாள வெள்ளப் பேரிடர்.. நீர்மின் திட்ட சுரங்கத்தில் மேலும் 6 உடல்கள் மீட்பு!
நேபாளத்தில் கடந்த மாதம் ஏற்பட்ட கடுமையான நிலச்சரிவு மற்றும் வெள்ளப் பேரிடரைத் தொடர்ந்து, மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், நீர்மின் திட்ட சுரங்கப் பகுதியில் மேலும் 6 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
நேபாளத்தில் கடந்த ஆகஸ்ட் 26-ஆம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளப் பேரிடரில் முதல் நாளிலேயே 100-க்கும் மேற்பட்டோர் பலியான நிலையில், தற்போது வரை மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதுவரை இப்பேரிடரில் 1,410 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 6,145 பேரை காணவில்லை என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் இதுவரை 13,756-க்கும் மேற்பட்டோர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். மின் திட்டங்களின் சுரங்கங்களில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் மீட்புக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
நுவாகோட் மாவட்டத்தில் உள்ள அப்பர் திரிசூலி-1 நீர்மின் திட்டத்தின் சுரங்கத்தில் நேற்று மேலும் 6 உடல்கள் கண்டெடுக்கப்பட்டு மீட்கப்பட்டன. சுரங்க நுழைவாயிலில் இருந்து 400 மீட்டர் தூரத்தைத் தாண்டி நடத்தப்பட்ட தேடுதலின் போது, கான்கிரீட் பணிகளுக்காக அமைக்கப்பட்ட இரும்புக் கம்பி வலையில் சிக்கியிருந்த நிலையில் இந்த உடல்கள் மீட்கப்பட்டன.
நேபாள பொறியாளர்கள் சங்கம் வெளியிட்ட தகவலின்படி, 13 நீர்மின் திட்டங்களில் இன்னும் 898 பேரை காணவில்லை என்றும், அதில் குறிப்பாக அப்பர் திரிசூலி-1 திட்டத்தில் மட்டும் 575 பேர் மாயமாகி உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.