நேபாள வெள்ளம்: மீட்புப் பணிகளை ஒருங்கிணைக்க 4 அமைச்சர்களை டெல்லிக்கு அனுப்ப முதல்வர் விஜய் உத்தரவு!
நேபாள பெருவெள்ளத்தில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்கும் பணிகளைத் தீவிரப்படுத்தவும், மத்திய அரசுடன் இணைந்து நிவாரணப் பணிகளை ஒருங்கிணைக்கவும் நான்கு அமைச்சர்களை உடனடியாக டெல்லிக்குச் செல்லும்படி முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
முதலமைச்சரின் உத்தரவின்படி, அமைச்சர்கள் ஆதவ், ராஜ்மோகன், வினோத் மற்றும் தென்னரசு ஆகியோர் டெல்லி விரைந்து சென்று, மத்திய அரசுடன் இணைந்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளைத் தீவிரமாகக் கண்காணிக்க உள்ளனர். மேலும், மீட்கப்பட்ட தமிழர்களைப் பாதுகாப்பாகத் தமிழகம் அழைத்து வருவதற்கான வழிகளையும் அவர்கள் ஒருங்கிணைப்பார்கள்.
இதனிடையே, நேபாளத் தலைநகர் காத்மாண்டுவில் நேரடியாக மீட்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதற்காக ஆஷிஷ் குமார் ஐ.ஏ.எஸ். தலைமையிலான சிறப்பு அதிகாரிகள் குழுவை அனுப்பி வைக்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
நேபாளத்தில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரிகள் மற்றும் டெல்லியில் உள்ள தமிழக அரசு அதிகாரிகளுடன் தொடர்ச்சியாகத் தகவல்கள் பெறப்பட்டு, அங்குள்ள தமிழர்களைப் பாதுகாப்பாக மீட்கும் பணிகள் தற்போது தீவிரமடைந்துள்ளன.